மக்களே...!!!
இன்னைக்கு நான் எழுத போறது சினிமா பத்தி... இல்ல....இல்ல... சினிமா விமர்சனம் அதுவும் இணையத்துல சினிமா விமர்சனம் அப்படிங்கற பேர்ல இப்போ நடக்கிற அநியாயங்களை பத்தி... அதுதான் சினிமா பத்தி எழுத நெறைய பேரு இருக்காங்களே...நமக்கு அதெல்லாம் எதுக்கு அப்படிங்கற ரீதியில தான் நான் ரொம்ப நாளா இருந்தேன்... ஆனா கொஞ்ச நாளா இணையத்துல வர சினிமா விமர்சனங்களை பார்க்கும்போதும், நடிகர் குறிப்பா நடிகைகளை பத்தின கமெண்டுகளை பார்க்கும்போது எரிச்சல் படாம இருக்க முடியல.
முன்னாடி எல்லாம் விமர்சனம் பண்ணும்போது குறைகளை சொல்லுவாங்க. இப்போ குறை சொல்றதுக்குன்னு விமர்சனம் பண்றாங்க. அதுவும் எல்லாம் தெரிஞ்ச மாதிரி இவங்க அடிக்கிற கூத்தெல்லாம் பார்க்கும்போது கடவுளே முடியல... இதுக்கும் இவங்க எல்லாம் சினிமால தான் வேலை பார்க்கறாங்களாம். அவங்களை பொறுத்த வரைக்கும் இங்க யாருக்குமே சினிமா பண்ண தெரியல... இவங்கதான் சினிமாவை காப்பாத்த வந்த அப்பாடக்கர்கள்... தமிழ் சினிமாவை வளர்க்க இவங்களால மட்டும் தான் முடியும்...
சினிமா வளராம இருக்க என்னென்னவோ காரணம் சொல்ற இவங்க, அதுவும் ஒரு படம் ரிலீஸ் ஆயிட்ட உடனே முதல் நாளே அது சரியில்லை... இது சரியில்லை...அப்பப்பா...!!! ஆனா, எல்லாம் தெரிஞ்ச இவங்க எத்தனை படம் பண்ணியிருக்காங்கன்னு கேட்டா பதில் இல்லை... இதுக்கும் இவங்க விமர்சனம் அப்படின்னு எழுதரதெல்லாம் படம் பத்தின இவங்க சொந்த கருத்துக்கள் தான்... விமர்சனம் எல்லாம் இல்லை... இவங்களுக்கு ஆக்சன் படம் புடிக்காதுன்னா ரிலீஸ் ஆகிற ஆக்சன் படம் எல்லாம் மொக்கை படம் தான்... வில்லேஜ் சப்ஜெக்ட் புடிக்காதுன்னா எல்லா வில்லேஜ் படமும் ஒண்ணுக்கும் உதவாதவை... இதுக்கு ஆஹா ஒஹோன்னு ஜால்ரா போட ஒரு கூட்டம்...
அதை விட பரவாயில்லை, ஏதாவது சில வெளிநாட்டு படம் பார்த்துட வேண்டியது. அவரை போல வருமா...? இந்த படம் மாதிரி இல்லை.... இதெல்லாம் இந்த படத்துலயே வந்திடுச்சி..... அந்த படத்துலயே வந்திடுச்சின்னு ஒரே ஒப்பீடு தான். சினிமாங்கறதே ஒரு வியாபாரம் தான். சொத்தையெல்லாம் அடமானம் வெச்சி, கடன் வாங்கின்னு எத்தனையோ கஷ்டப்பட்டு தான் நெறைய பேரு சினிமா எடுக்க வராங்க. அதுக்கு பின்னாடி என்ன காரணம் வேணும்ன்னாலும் இருக்கட்டும், கஷ்டப்பட்டு தான் சினிமாவுக்கு வராங்க அப்படிங்கறது உண்மை.
படம் ரிலீஸ் ஆன முதல் ஒரு மணி நேரத்துக்குல்லயே மொக்கைன்னு விமர்சனம் மாதிரி ஒன்னு எழுதி போட்டா, அதுக்கூட ஒப்பனிங் வியாபாரத்தை பாதிக்கலாம்ன்னு சினிமாவை காப்பாத்த வந்த பாதுகாவலர்கள் மாதிரி சீன விடற இவங்களுக்கு ஒரு காமன்சென்ஸ் ஏன் இல்லாம போச்சி...? ஏன்... அதே மொக்கை விமர்சனத்தை ஒரு வாரம் கழிச்சி போட்டா என்ன சாமி வந்து கண்ணையா குத்த போகுது...?
மொக்கை படத்தை மொக்கை படம்ன்னு எழுதுங்க... ஆனா இவங்களை பொறுத்த வரைக்கும் எல்லாமே மொக்கை தான். இவங்களுக்கு உலகத்துல இருக்கிற எல்லா மொழி படங்களும், வெளிநாட்டு படங்களும் உட்பட வசதிகள் வாய்ப்புகள் இருக்கு. அப்படி பார்த்து பார்த்து உங்க ரசனைய உயர்த்தி வெச்சிருக்கிங்க... அதாவது அது மாதிரி சீன போடறிங்க... உங்களுக்கு தமிழ்ல வந்த எந்திரன் எல்லாம் ஜுஜுபி. இவங்க எந்திரன் பாக்கும்போது அதைவிட பலநூறு மடங்கு செலவு பண்ணி எடுத்த, டெர்மினேட்டர் கூடவும், ஐ ரோபோட் கூடவும் தான் ஒப்பிடுவாங்க. மொக்கை அப்படிம்பாங்க... இவங்களை போல இருக்கவங்க தமிழ் நாட்டு ரசிகர்கள்ள ஒரு பத்து சதவிதம் இருப்பாங்களா..? ஆனா, இன்னமும் சிங்கள் ஸ்க்ரீன்ல பழைய எம்ஜியார் படத்து கலர் பல்பு பாதாள அறையை வியப்பா பார்க்கிற ரசிகர்கள் எவ்வளவோ பேரு எனக்கு தெரியும். அவங்களுக்கு இந்த படங்கள் சூப்பர்தான்... இவங்களை பொருத்தவரைக்கும் தொடை தட்டி சவால் விடற ஹீரோ, பறந்து பறந்து சண்டை போடற ஹீரோ போதும்.
அண்ணே அண்ணே அப்படின்னு நெனக்கிறேன்... ஒரு பழைய அர்ஜுன் படம். ரொம்ப பழசு... படு மொக்கை... அந்த படத்தை இப்போ தியேட்டரில் பார்த்திட்டு, அதுல அர்ஜுன் நான் ஒரு அனாதைன்னு வசனம் பேசறதை பார்த்து தியேட்டர்லயே அழுதவங்களை, அதுவும் இப்போ நான் பாத்திருக்கேன். இவங்களுக்கு நம்ம ஊரு பட்ஜெட்டுக்கு, நம்ம ஊரு ஸ்க்ரீன்ல காட்டுற மேஜிக் பெருசுதான்.
நம்ம ஊரு பட்ஜெட்ல, [பல நூறு கோடி கொட்டி எடுத்த படங்களோட தரத்துக்கு போட்டியா வர அளவுக்கு படங்கள் வரும்போது சில பல குறைகள் இருக்கத்தான் செய்யும். பாராட்ட தோனலைன்னாலும் குறை சொல்லியே அவங்களை முடிச்சிடாதிங்க... கொஞ்சம் மனசாட்சியோட எழுதுங்கப்பா...!!!