Zool Ad Network

Thursday, March 28, 2013

இதற்கு தைரியம் என்று பெயர்

மக்களே...!!!

ஏற்கனவே நெறைய நண்பர்கள் இதை பத்தி எழுதியிருக்காங்க. உங்கள்ள நெறைய பேரு இந்த பேச்சையும் கூட கேட்டிருப்பிங்க. எம்.ஜி.ஆர் அவர்களை  சுட்டதுக்கு அப்புறம், நடிகவேள் எம்.ஆர் ராதா அவர்கள் மலேசியாவில் ஒரு கூட்டத்தில் பேசின பேச்சு. காலம் சென்ற எம்.ஆர் ராதா அவர்கள் மனசுல பட்டதை, அவர் யாரா இருந்தாலும் அவங்ககிட்ட அப்படியே தைரியமா பேசக்கூடிய இயல்புடையவர். இது இந்த பேச்சை கேட்டா உங்களுக்கே அது புரியும். அவர் பேசினதை முடிஞ்ச வரைக்கும் அப்படியே எழுதியிருக்கேன். படிச்சி என்ஜாய் பண்ணுங்க.



படிக்கும்போது சில இடங்களில் விட்டு போனதுப்போல இருக்கும். ஆனா அது அவர் பேசின பேச்சு அப்படியே எழுதினதால வந்தது. அந்த பேச்சையும் இங்கே இணைக்கிறேன். படிக்கலாம் அல்லது அதை கேக்கலாம். உங்க விருப்பம். ஆனா முடிஞ்சா வரைக்கும் உங்க கருத்துகளை பின்னூட்டதுல சொல்லுங்க. சந்தோசப்படுவேன்.



''...பேரன்பு மிக்க பெரியோர்களே, உத்தியோகஸ்தர்களே, என்னை இங்கே வரவழைத்த திராவிட கட்சி தோழர்களே, என்னை இங்கே வரக்கூடாது என்று பெட்டிசன் போட்ட என் இனிமையான நண்பர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

நான் மலேசியா நாடு வர வேண்டிய காரணம் நமது நண்பர் ராமசாமி அவர்கள் தானே தவிர.... நான் எப்பொழுதுமே வெளிநாடு செல்வதில்லை. எனக்கு அது அவ்வளவு பிடித்ததில்லை. அவ்வளவுதான். காரணம் எனது குழந்தைகள் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இருக்கிறார்கள், ஆனாலும் அவர்களை பார்க்க கூட போனதில்லை. பிரியமில்லை. இருந்தாலும் இங்க வர காரணம் இங்கே தமிழர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களை பார்த்து இங்கே அவர்கள் எப்படி வாழ்கிறார்கள், ரப்பர் தோட்ட மக்களை பார்க்க வேண்டும், அவர்கள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் பார்த்து போக வந்தேன். அது இல்லாம மற்றவர்கள் மாதிரி சாமான்கள் வாங்கவோ, இல்லை துணிகள் வாங்கவோ இல்லை இந்த ஒஸ்தியான சரக்கு இருக்குன்னு சொல்றாங்களே அதுக்கிட்ட எல்லாம் நெருங்கறதுக்கு நான் வரல்லே...''

''...ஆகையினாலே தமிழர்களுக்கு பொதுவாக சொல்கிறேன், நீங்கள் இந்த நாட்டிலே நான் பார்த்த அளவிலே, நீங்கள் நல்ல முறையில் வாழ்கிறீர்கள். எல்லாரும் நல்லா அழகா இருக்கிறீங்க. நாடு எப்படி பசுமையா இருக்கோ, அது மாதிரி நீங்களும் பசுமையா இருக்கீங்க. நெனச்சா, ஒரு 30 வெள்ளி குடுத்தா ஒரு நாள் பூரா பென்ஸ் கார்ல போறீங்க. அங்க ஜட்கா வண்டியில கூட போக முடியாது, மெட்ராஸ்ல. எங்களை பேசவில்லை. மக்களை. நீங்க மக்கள் எல்லாரும் நல்லா இருக்கறிங்கோ. அங்க, நாங்க நல்லா இருக்கோம் அவ்ளோதான். மக்கள் அப்படி இல்ல. ஆனா, நீங்க எல்லாரும் நல்லா வெள்ளைக்காரன் மாதிரி கோட் போட்டுட்டு தான் இருக்கிறிங்கோ. ரப்பர் தோட்டத்துல இருக்கறவன் வேற மாதிரி இருப்பான்னு போய் பார்த்தேன், அவனும் கோட் போட்டுட்டு தான் இருக்கான். நம்ம நாடு மாதிரி இங்க யாரும் கோவணம் கட்டிட்டு இல்லை. அது ஒரு பெரிய மகிழ்ச்சி...''

''....நான் ஒரு விஷயம் கேள்விப்படுகிறேன். இங்கே இருந்து அங்கே போய் நம்ம நாட்டுல போய் வாழலாம்ன்னு கருதுவதாக கனவு கண்டுட்டு இருக்கறதாக தெரிகிறது . வேண்டாம்... தயவு செய்து யாரும் தமிழ்நாட்டு பக்கம் திரும்பவே கூடாது. இந்த தாயகத்தை விட்டு... உங்களுக்கு சொல்லுகிறேன். இது மாதிரி ஒரு நாடு உங்களுக்கு கிடைக்காது. இது இஸ்லாமிய மதம் உள்ள நாடு. பேசுவாங்க மக்கள்... கட்சிகளை பேசலியா... ஒவ்வொருத்தான் ஒரு கட்சியை பத்தி பேசலியா... தமாசா ? கட்சிய பத்தி ரொம்ப பேருக்கு என்ன தெரியும்ன்னு எனக்கு தெரியல... ஆனா, எனக்கு எல்லா கட்சி அஸ்திவாரம் பத்தியும் தெரியும்... எல்லா கட்சி தலைவர்களும் எனக்கு நண்பர்கள். நீங்க ஒன்னு நெனச்சிக்கணும், எவன் ஆண்டாலும் சரி கடவுளே நாட்டை ஆண்டாலும், உழைச்சி தான் சாப்பிடனும்.... தவிர சும்மா வாய்ல வந்து ஊட்ட மாட்டான் யாரும். அங்க உழைச்சாலும் சாப்பிட முடியாது...!!!! ஓரளவுக்கு தான் சாப்பிடலாம். நீங்க உழைச்சி நன்றாக நீங்கள் சாப்பிட்டு இருக்கிறீர்கள். ஆகையினாலே, எந்த காரணத்தை முன்னிட்டும் அந்த எண்ணத்திலே தமிழ்நாட்டுக்கு வந்து விடலாம் என்று யாரும் கருதி தவறி வந்து விட போகிறீர்கள்...''

''... அது, வந்தவனை எல்லாம் வாழ வெக்கும் தமிழ்நாடு. அது எங்களுக்கு தெரியும். வந்தவனை எல்லாம் அப்படின்னா யாரை ? எங்க எல்லாம் ஒதைச்சி அனுப்பறான்களோ, அவனை எல்லாம் வாழ வெக்கும், அவ்ளோதான்.  நீங்க வந்தா அது நல்லா இருக்காது. நல்லா இருக்கறவங்க எல்லாம் வரக்குடாது. எனக்கு பொறாமையா இருக்குது, உங்களை பார்த்து. எவ்வளவு நல்ல நாட்டுல வந்து சேர்ந்திருக்கிங்க... தெரிஞ்சிருந்தா, உங்க கூடவே வந்திருக்கலாம். அவ்ளோதான் சான்ஸ் போச்சி. என்ன பண்ணி தொலைக்கிறது ? ஆகையினால, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்த் இதை பத்தி எல்லாம் ரொம்ப பெருமையா பேசுவான். தமிழன்... அங்கயும் உக்காந்துகிட்டு இங்கயும் உக்காந்துகிட்டு.... வேற ஒரு நாட்டை தான் பத்தி பேசுவான் தமிழன்...''

''.... அமெரிக்காவுல யாருக்காவது மந்திரி வேலை குடுப்பானா... இல்லை, தமிழனுக்கு  சுப்பிரென்ட் ஆப் போலீஸ் குடுப்பானா.... இல்லை.... எம் எல் ஏ  குடுத்திருவனா? அமெரிக்காவை விட, ரஷ்யாவை விட எல்லா இனத்துக்கும் இங்கே உத்தியோகம் தந்திருக்கானே... இந்த மலேசியா நாடு...!!!! இதை விட உயர்ந்த நாடு அது என யாரும் கருதி விடக்கூடாது. எதோ ஒரு சிறு சிறு பிணக்கங்கள் இருக்கலாம். போக போக உங்களுக்கு சரியாகி விடும். இஸ்லாம் மதம் மிக உயர்ந்த மதம். அது பெரியார் ஒரு காலத்திலேயே சொன்னார் திராவிடர் கழகத்திலே, அங்கே பார்ப்பனன்ர்கள் செய்யும் கொடுமையை முன்னிட்டு, நீங்கள் மிக கொடுமை செய்தால் திராவிடர் கழகத்தில் நாங்கள்   அத்தனை பெரும் இஸ்லாமியர்கள் ஆகிவிடுவோம் என்று. அன்று பயமுறுத்தினார் ஒரு காலத்திலேயே. ஆகையினால் அந்த மதத்தில் ஒன்று தப்பில்லை. நல்லது ஒரு கடவுள் வைத்திருக்கிறார்கள். நல்லதொரு நாகரிகமான கொள்கை. அவரும் கஷ்டப்பட்டு தான் வந்தார். நீங்களும் கஷ்டப்பட்டு வரவேண்டும் நாட்டிலே முன்னுக்கு இன்னும். கடவுளே கஷ்டப்பட்டு தான் வந்தார் உலகத்திலே. நபிகள் நாயகம் அவர்கள் நல்லதொரு சீர்திருத்த கொள்கைகளை சொன்னதற்காக மெக்காவில் இருந்து மெதினா வரையில் கல்லால் அடித்து துரத்தப்பட்டார். தொழுகையின் போது ஒட்டகத்தின் குடலை அவர் முதுகிலே சுமத்த வைக்கப்பட்டார் இந்த மடமை உலகிலே. இன்று அறிவு உலகம் அவரை ஆண்டவராக ஏற்றுக்கொள்ள வில்லையா ? நன்றாய் சிந்தித்து பார்க்க வேண்டும். ஏசுபிரான் அவர்கள் பல சீர்திருத்த கருத்துக்களை சொன்னதற்காக  இரும்பு தொப்பியிலே முட்கள் பதித்து தலையில் வைத்து சம்மட்டியால் அடித்து கொன்றார்கள் இந்த மடமை உலகிலே. இன்று அவரை ஆண்டவராக ஏற்றுக் கொள்ளவில்லையா ? எங்களுக்கு, அறிவு உலகத்துக்கு தெரிந்த ரெண்டு ஆண்டவர் தான்... புத்தர் அவரை தான் ஏற்றுக்கொள்கிறோம் இப்போது அந்த நாட்டிலே. பல கடவுள் இருக்கு. குளோஸ் கணக்குல வெச்சிருக்காங்க. இது அவரவர் இஷ்டம்... அது அதை நாம தடை செய்ய முடியாது... ஆனா, அறிவுக்கு எட்டின கடவுளை தான்  பாராட்டக்கூடியவர்கள். நாம அறிவு குடுக்கிறோம்.  சீர்திருத்த கருத்துக்களை சொல்கிறோம் நாங்கள். எங்களுக்கு அங்க நாட்டிலே வேற வேலை இல்லை. மக்களை திருத்துகிறோம்... அவ்வளவு தான். குழந்தைகளை படிக்க வெயுங்கன்னு சொல்கிறோம்.... கேக்க மாட்டேன் என்கிறார்கள்...'''

''.....இங்க பார்க்கிறேன், ஆறரை மணிக்கு குழந்தைகள் ஸ்கூலுக்கு போகுது. இந்த காட்சியை எந்த நாட்டிலே பார்க்க முடியும்? இப்படி தமிழன் படித்த காலத்தை போல் சேரன் சோழன் பாண்டியன் காலத்தில் கூட படித்ததில்லை. தமிழர்கள் குழந்தைகள் படிக்கிறார்கள். தாயும் படித்தவர்கள் தந்தையும் படித்தவர்கள். பள்ளியிலே இருந்து வந்ததும் என்ன படிச்ச, எவ்வளவு மார்க்ன்னு  கேட்கிறார்கள். அதனால எல்லாம் படித்தவர்களாக இருக்கிறீர்கள். அங்க படிப்பில்லை. மக்கள் படிக்கல. படிப்பு குடுத்திருக்காங்க. ஆனா, மக்கள் படிக்க போகலை. இங்க குழந்தைகள் காலையில ஆறரை மணிக்கு எழுத்திருக்குது. ஆனா, அங்க குழந்தை பத்தரை மணிக்கு எழுந்த்ருக்கும். ஆடு மாடு அவுத்து விடற மாதிரி விடுவான். எழுந்ததும் கஞ்சி ஊத்தர இடத்துல போய் சுத்தி உக்காந்துகிட்டு டான்ஸ் பண்ணும், அவ்ளோதான். . ஒன்னு கையில வுட்டு சாப்பிடும் இன்னொன்னு கால வுட்டு சாப்பிடும். சாப்பிட்டதும் நேரா எங்கியாவது போயிடும். சினிமாவுக்கு போயிடும். சின்ன வயசுல சினிமா. அதான் உருப்படாம போயிடுச்சி. தாய் தகப்பன் கண்டிக்கிறதில்ல. குழந்தைய கேப்பான். ''....எங்க நைனா போன இன்னைக்கு?...'' கொஞ்சுவான் குழந்தைய புடிச்சின்னு. இந்த கோத்தி பிள்ளா மாதிரி குழந்தைய புடிச்சிகிட்டு. கொஞ்சுவான்.

''...எங்க நைனா போன ?..''

''...நான் இன்னைக்கு பள்ளிக்கூடம் போவுல நைனா. சினிமாவுக்கு போனேன் நைனா !!! ...''

''...குழந்தை பார்க்க கூடிய சினிமாவா தமிழ்நாட்டில் எடுக்கிறார்கள்? பெரியவனே கேட்டுபோயி கெடக்கிறான். மனுஷன் உள்ள போய் பார்க்க முடியாத அளவுக்கு ஆபாசமாக பாடல்கள். ஒவ்வொரு வார்த்தைக்கு மூன்று அர்த்தங்கள். தவறான பாதையில உள்ள அர்த்தங்கள். பார்க்கலாமா சினிமாவ அப்படின்னு  அடிக்கணும் தகப்பன். அந்த நிலை அந்த நாட்டிலே இன்னும் வரவில்லை.

நல்லா இருக்காடான்னு கேப்பான். என்ன படம் பார்த்த நைனான்னு கேப்பான். ஜெமினி கணேசனும், சாவித்திரி... இவன் சிவாஜி கணேசனும் சாவித்திரி சேர்ந்து டாப்பாங்குத்துன்னு சொன்னாங்க அதை பார்த்தேன்னுவான். அவங்க ஆக்ட் பண்ணது எல்லாம் இவன் அறிவுக்கு எட்டாது. ஆனா, டப்பாங்குத்துன்னா அவ்வளவு டேஸ்ட் அங்க. அறையனும் டப்பாங்குத்து பார்க்கலாமா... பார்க்கலாமா.....???? ஆனா, அவன்கிட்டேயே அப்பன் கேப்பான்....  நல்லா இருக்காடா நைனான்னுன்னு... .  அவன் நல்லாயிருக்குன்னுவான். சரி நீ இங்க வீட்ல தூங்கு.... நானும் உங்கோத்தாலும் ரெண்டாவது ஷோவுக்கு போறோம்ன்னுவான் இவன். இப்படி குழந்தைகள் படிப்பதில்ல அங்க நாட்டிலே. இதையெல்லாம் சீர்திருத்தம் செய்கிறோம் நாங்கள். தவிர பலருக்கு பல சந்தேகங்கள்...''

''.....நான் வரலன்னு சொன்னதுக்கு காரணம் ஒரு பெட்டிஷன். மூணு மணிக்கு ஒரு கூட்டம் நடந்தது. நான் பேசினேன், ஒரு பார்லிமெண்டரி தலைமையில. அவர் மலேசியா. அவர் சொன்னார். இப்படி ஒரு பெட்டிஷன் வந்திச்சி. இவர் கெட்டவர்னு வந்திருக்கு, நான் கூட இவரை வெச்சி எப்படி பேசறதுன்னு. ஆனா, இவர் கெட்டவர்னு இருந்தா இவ்வளவு கூட்டம் வருமான்னு பேசறார்....''

''....நம்ம தமிழர் தான் . நம்ம ஜனங்கதான். மெட்ராஸ்ல இருந்து புறப்பட்டு வந்தமே அந்த தமிழர் தான். நம்ப தமிழன்னாவே அப்படிதான் இருப்பாங்க. எல்லாம் நாம அட்ஜஸ்ட் பண்ணிட்டு தான் போகணும். என்ன எழுதி இருக்காங்க....? அங்க சுட்டுட்டு ஜெயில இருந்திட்டு இங்க வந்திருக்காரு. எவ்வளவு சுளுவா என் கதைய தெரிஞ்சிக்கிட்டாண்டா இந்த நாட்டுல... ஹா ஹா ஹா ...!!! யாரை போய் சுட்டோம்? எதோ ரெண்டு நண்பர்கள், எம். ஜி. ராமச்சந்திரன் நானும்... ஒரு நண்பன், 50 வருசமா நண்பர்கள்... எதோ தமாசா  சுட்டுக்கிட்டோம். ஏன் டப்பாஸ் சுட்டுக்கல ? அதே தான்... ஏன் சுட்டுக்கிட்டா என்ன இப்போ? நாங்க ரெண்டு பெரும் அங்க வாழறோம்... நாங்க சுட்டுக்கறோம்... தமாஸ்...!!!!! அதை இவனுக்கு தெரியாம, இங்க இருக்கற பய, இவன் சும்மா  ரெண்டு ரூவா டிக்கெட் வாங்கிட்டு வேடிக்கை பாக்கிற பய, இவன் எதோ அவனை தெரிஞ்ச மாதிரி   பேசறான்.  என்னுடைய சிநேகிதன் ராமச்சந்திரன்.... நாங்க கோவத்துல எதோ சுட்டுக்கிட்டோம்.... ஏன் சுட்டுக்க கூடாதா ? புருசனும் பொண்டாட்டியும் அடிச்சிக்கல...? ஏன் அதை போய் கேளேன் பார்ப்போம் ? அப்பனும் மவனும் வெட்டிக்கல ? அதே மாதிரி ரெண்டு நண்பர்கள் அடிச்சிக்கிட்டோம், அவ்ளோதான். கையில கம்பு இருந்தா கம்பு எடுத்து அடிச்சிருப்போம். கத்தி இருந்தா..... கத்தி இருந்தா கத்தி எடுத்து அடிச்சிக்கிட்டிருப்போம். ரிவால்வர் இருந்திச்சி.... அந்த நேரத்துல, எடுத்து ரிவால்வர்ல அடிச்சிகிட்டோம். அடிச்சிகிட்டு டப்புன்னதும் தப்புன்னு நிறுத்திகிட்டோம்.  நாங்க என்ன ஒருத்தரை ஒருத்தர் கொன்னுக்கனும்னா சுட்டுகிட்டோம் ?  கன்ல... ரிவால்வர்ல எட்டு தோட்டா இருக்கு...... எட்டு தோட்டா இருக்கு...... அப்படி விரோதம்ன்னா எட்டு தோட்டாவையும் பயன்படுத்தியிருப்போம்.  ஒரு தோட்டாத்தான் ஆச்சி. இல்லை வெடிக்கிதா வெடிக்கலயான்னு பார்த்தோம்.... வெடிச்சிடுச்சி. அதுக்கு நம்ப என்ன செய்ய முடியும்...??? அதையெல்லாம் புரிஞ்சிக்காம ரொம்ப பேரு தவறாம பேசறான் இங்க...''''

''......பெரியார் இருந்தப்போ ரெண்டு பேரும்தான் கிட்ட இருந்து பேசிக்கிட்டு இருந்தோம். அதுவுமில்லாம ராமச்சந்திரன் என்னிடத்துல ரொம்ப மரியாதை உள்ளவர்.  ஆனந்த விகடன்ல எழுதியிருக்கறாரு  நான் ஏன் பிறந்தேன்னு.. நடிகவேள் ராதா அண்ணன்தான் இந்த கலை உலகத்திலே எனக்கு வழிக்காட்டின்னு... அதை எல்லாம் படிச்சி பார்க்கோணும். அதையெல்லாம் படிக்கிறதில்ல இவங்க. அதை படிச்சி இன்னொருத்தன்  வேற மாதிரி எழுதுவான்..... அதை படிச்சிட்டு எதையாவது சொல்றது....  நேர்ல பார்த்தா தான் சொல்லணும் . சிவாஜி கணேசன் என்னோட கம்பெனியில இருந்தவன்.... ஆக்டரா...!!! எல்லாருமே என்னோட கம்பனியில இருந்தவங்க ஒரு அளவுக்கு அந்த நாட்டுல.. அவ்வளவுதானே தவிர, ஆக்டர் பத்தி உங்களுக்கு பிரச்சனை இருக்க கூடாது. நீங்க பார்க்கறிங்க.... ஆக்ட் நல்லா செய்யறோம், சந்தோசப்பட்டுக்கிட்டு போங்க...!!!! கோயிலுக்கு போறீங்க, சாமிய கும்பிடுங்க... மரியாதையா வெளிய வாங்க...!!!! சாமிகிட்டே உக்காந்துகிட்டு குடும்பம் நடத்தாதிங்க. நல்லா இருக்காது. அதே மாதிரி, எங்களை பார்த்தா அபிப்ராயம்.... நல்லா இருக்கு...!!! சொல்லிட்டு போயிடனும். அதனால, நாங்க தான் பெருசுன்னு எங்களையேவா நெனச்சிட்டு இருக்கிறது ?  ஒரு அறிவாளிய பத்தி நெனக்க கூடாதா நீங்க? இந்த நாட்டுல எத்தனை பேர் அதிகாரிகள்... அந்த அதிகாரி நல்லவர்... இந்த அதிகாரி நல்லவர், அவர்களை பத்தி புகழுங்கள். நாங்க எல்லாம் எங்கயோ கூத்தாடறோம். அது இங்க வந்து திரையில் காமிக்கறான். நாங்க எல்லாம் கலைஞர்ன்னு பேசறாங்க எல்லாரும். அது இப்போ வந்தது  பேரு. சமீபத்தில.... எங்களுக்கெல்லாம் பணம் வந்த உடனே  கலைஞர்ன்னு குடுத்தாங்க. அது எவன் காசு வாங்கிட்டு குடுத்தானோ, அதுவே எனக்கு தெரியல. கலைஞர் அப்படின்னா நாங்க என்ன உயர்ந்தவர்களா ? அது அப்படி இல்ல....''

''.....நாங்க எல்லாம் கோடீஸ்வரனுங்க. கோடீஸ்வரன் மட்டும் இல்லை இன்கம்டேக்ஸ் பாக்கிகாரனுங்க நாங்க தான். நாங்க பெரிய தப்பெல்லாம் அங்க செய்வோம். இன்கம்டேக்ஸ்ன்னா என்ன? அது ஜனங்களுக்கு தெரியல, அது அறிவில்லை. இன்கம்டேக்ஸ் அப்படின்னா அது மக்களுடைய பணம். மக்களுடைய பணத்தை குடுக்காம ஏமாத்தற கூட்டம் இந்த கலைஞர் பசங்க அவ்ளோ பேரும். நான் உள்பட. எதுக்கு சொல்றேன்....!!!!!!????? எதோ இப்போ எல்லாரும் பயந்துட்டு கட்றாங்க எல்லாரும், நான் 13 லட்சம் கட்டோணும்.  அவங்க எங்க எங்கிட்டு இருந்து வாங்க போறான், நான் எங்க கட்ட போறேன்....!!!!! அது ஒன்னும் இல்ல. இதோ வருசா வருஷம் அது வரும். ஆகட்டும் பார்க்கலாம்னு சொல்லி உட்டுட்டே இருக்கேன். எதுக்காக சொல்றேன் ? நாங்க அவ்ளோ தப்பெல்லாம் செய்றவங்க. மக்களுடைய பணத்தை மோசம் பண்றவங்க கூட்டம் இந்த சினிமாக்காரங்க கூட்டம். இதை நான் ஏன் சொல்றேன், இன்னைக்கு நாங்க மலேசியா வரோம்  எங்களை வரவேற்கறாங்க இந்த நாட்டு மக்கள். எங்க மேல எவ்ளோ பிரியமா இருக்கிறாங்க. புரியாத காரணம். இவங்க அங்க வந்தா திரும்பி பார்ப்பானா அவன்? கூர்க்கா போட்டிருப்பான், இல்ல நாய் கட்டியிருப்பான். இவ்ளோதான். மலேசியாவுல இருந்து இங்கிருந்து போயிட்டு வந்தவன் சொல்றதை கேட்டா தெரியலயா உங்களுக்கு....??? நாங்க எல்லாரும் ஒன்னும் இல்லாதவங்க... நாங்க எல்லாம் இன்னைக்கு பணக்காரன் ஆகியிருக்கோம்னா ராவும் பகலும் நாங்க நெனக்க வேண்டியது உங்களை. நீங்க பார்த்து கொடுத்த பணம். சினிமாவுக்கு டிக்கெட் வாங்கிட்டு பார்க்கறிங்களே, அந்த பணம்துல தான் நாங்க பணக்காரன் ஆனோம். அந்த அப்பணம் தான்...!!!!! உங்களுடைய பணம்....!!!!!! உங்களுடைய பணத்தாலே, முன்னேறிய கூட்டம் சினிமாக்காரர்கள். நீங்கள் தான் எங்களுக்கு தலைவர்கள். அதை விட்டுட்டு எங்களை தலைவர்களாக்கி விட்டுட்டு ரொம்ப பேரு இருக்காங்க. அந்த நிலைமை மக்களுக்கு வர கூடாது, என்று தான் உங்களுக்கு நான் சொல்லுகிறேன்....''''

 
''.....ஆகவே, என் அருமை தோழர்களே, தவிர ஓவரா பிரியம் வெச்சிகிட்டு... தலைக்கு மேல ஓவர் இதெல்லாம். நாங்க நாடகத்துல எவ்வளவோ கஷ்டப்பட்டு வந்திருக்கிறோம். எங்களுடைய சரித்திரமே தெரியாது. அந்த காலத்துல, நாடகத்துல... கூத்தாடின்னு ஏன் பேரு வெச்சான் எங்களுக்கு ...????? சும்மாவா வெச்சான்...?  ஒன்ஸ்மோர்...!!!!  பாடிட்டு உள்ள போவோம்..  அப்பத்தான் வந்திருப்பான் அவன்... ஒன்ஸ்மோர்...!!!!! இன்னொரு வாட்டி பாடனும்... அப்புறம் நாட்டாமைகாரன் வருவான்... பாதி நாடகத்துல... நாடகமே ஒன்ஸ்மோர் அப்படின்னுவான்... பழையபடி நாங்க பாடனும்... இல்லன்னா வுட மாட்டான். சாவுற சீன்ல சாவோம். ஒன்ஸ்மோர்ன்னுவான்... இன்னொரு வாட்டி எழுந்துருச்சி சாவோனும். அவ்வளவு அறிவுள்ள மக்கள்... அப்படியெல்லாம் நாங்க நடத்தி அந்த கூத்தாடறதால தான் கூத்தாடின்னு வெச்சான். மக்கள் சொல்லுகிறபடி எல்லாம் கூத்தாட கூடியவனுக்கு  தான் கூத்தாடின்னு பேர். வர வர திருத்தறோம் அந்த உலகத்துல  நாங்கள்....'''

''....அந்த காலத்துல ராஜா எல்லாம் என்ன செஞ்சான் ? அந்த கதை எல்லாம் பார்த்திருப்பிங்களே....!!! வருவான் ராஜா. ''....மந்திரி ...!!!! மாசம் மூணுவாட்டி மழை பேஞ்சதா ? அரசியல் நடத்துறானுங்க அந்த காலத்துல... மூணு வாட்டி மழை பெய்யும்போது இந்த பயலுக்கு  ஒரு வாட்டி கூட  தெரியாது. இவன் எங்கயாவது பொம்பளைங்களோட உருண்டுட்டு கெடப்பான் அந்த பய. அந்த காலத்து ராஜாக்களுக்கு வேற என்ன வேலை அந்த காலத்துல...? மக்களை என்னா சுகமா வெச்சிருந்தானா ? சோம்பேறி பசங்க மாதிரி சாப்பிடறது .. வேற மக்களுக்கு என்ன வேலை குடுத்தான்... உயர்த்திட்டான். சொல்லுவாங்க அவனை பத்தி  புகழ்ந்து பேசறவன் எல்லாம் வந்தா வரலாம் நேரா. நான் உண்மையை சொல்றதால எனக்கு தடை. இந்த ராஜா கதைய சொல்ல சொல்லு என்கிட்டே.... அப்படியே பிச்சி பினாத்தி புடுவேன் ஒவ்வொன்னையும் எடுத்து எடுத்து. சேரன் சோழன் பாண்டியன் எல்லாம் 50 மைல் டிப்பரன்ஸ்ல தான் ஒவ்வொருத்தன் ஒவ்வொரு ராஜா. இவன் பொண்டாட்டிய அவன் இழுத்துட்டு போயிடுவான், அவன் பொண்டாட்டிய இவன் இழுத்திட்டு போயிடுவான். இதுக்கு ஊரு ஜனங்க தாலி அறுத்து சாவோனும் சண்டையில. பெரிய ஆண்டுட்டாங்க....!!!!! இன்னைக்கு ஆள்பவர்கள் தானடா மனிதர்கள். இன்று மக்களுக்காக ஆளக்கூடியவர்கள். எந்த நாட்டுலயா இருந்தாலும் சரி, எந்த நாட்டையும் எடுத்துக்கொள். மக்களுக்காக தான் அரசாங்கம்...'''

நீங்கள் எல்லாம் ஒரு காலத்திலே இங்கே வந்தீர்கள் என்றால் எப்படி வந்தீர்கள் மலேயாவுக்கு. அந்த நாட்டிலே செய்த கொடுமை தமிழகத்திலே. பள்ளா... பறையா... தொடாதே... ரோட்டிலே நடக்காதே... குடை புடிச்சிட்டு போகாதே... செருப்பு போட்டுட்டு போகாதே... என்று கொடுமை படுத்தியது அந்த காலத்திலே ஆரியம். பிராமினிசம்...!!! நான்-பிராமினிசத்தை அழித்தது. அதுலதான் எல்லாரும் முகம்மதியர்கள் ஆனார்கள்... கிருஸ்துவர்கள் ஆனார்கள்.... எப்படி ஆனார்கள்? வந்தாங்களா அங்கே  இருந்து...? சரித்திரம் தெரியாதவன் பேசக்கூடிய பேச்சு.....!!!!! இவர்களை பள்ளா..!!! பறையா...!!! என்று நொறுக்கியதால் இங்கே வந்து விட்டார்கள். நாங்க ஏதோ இருந்து நின்னு போராடிகிட்டு இருக்கிறோம் இன்னைக்கும்.  போராடி போராடி தான் இன்று தமிழர் ஆட்சின்னு ஒன்னு உண்டாக்கி இருக்கிறோம். அது தந்தை பெரியாரால்  என்பதை யாரும் மறுத்து விடக்கூடாது. நாங்கள் அவ்வளவு எத்தனையோ வாட்டி ஜெயிலுக்கு போயிருக்கோம். எது எதுக்கோ ஜெயிலுக்கு போயிருக்கோம். என்னவோ ஜெயிலுக்கு போனவர்னு சொல்றான். ஜெயில்ன்னா இவனுக்கு என்ன தெரியும்? இருக்கு இங்கயும்.. ஜெயில் பத்தி இது வேற.... இருந்தாலும் அந்த நாட்டு ஜெயில் வேற இல்லையா ? ஜெயிலுக்கு, பெரிய அறிவாளிகள் எல்லாம் உண்டாகிற இடம் ஜெயிலு. அங்க  போயிட்டு வந்தாதான் நாட்டை ஆள  வரலாம். எடுத்துக்கயேன், காந்தி, ஜவகர்லால் நேரு, தலைவர் காமராஜ், அறிஞர் அண்ணா,  கலைஞர் கருணாநிதி இவங்க எல்லாம் காலேஜ்ல இருந்துகிட்டா நேரா அரசியலுக்கு வந்தாங்க? ஜெயிலுக்கு போயிட்டு அப்புறம் நேரா அரசியலுக்கு வரணும். அரசியல் நடத்தறதா இருந்தா மொதல்ல ஜெயில்ன்ற காலேஜ்ல போயி படிக்கோணும். அப்படித்தான், ஒவ்வொருத்தரும் ஒரு பிளான்ல போறோம். நான் ஒரு பிளான்ல போறேன். ஆக, ஜெயில்ன்றது ரொம்ப உயர்ந்தது. எனக்கென்னமோ, ஜெயில்ன்றது பத்தி இங்க இருக்கற பெரிய ஹோட்டலுக்கு சமானமாதான் நெனக்கிறேன். எதோ, வெள்ளைக்காரன் ஆளும்போது நம்பல கொடுமை படுத்தினான் ஜெயில்ல...விகரஸ் இம்ப்ரஸ்மென்ட்... கடுமையான தண்டனைன்னு கொடுத்தான். எனக்கென்ன அதே பாடம் விகரஸ் இம்ப்ரஸ்மென்ட் செவென் இயர்ஸ் அப்படின்னு கொடுத்தான். எனக்கு கொடுத்தது ஏழு வருஷம். இருந்தாலும் மூணு வருசத்துல விட்டுட்டான். அவ்ளோதான். ஏன் விட்டான்...? நாங்க வேலை செஞ்சிருக்கோம். என்னை விடோனும்ன்னு கெஞ்சுனமா...? அப்படி அல்ல... எங்களை உள்ள வெச்சிட்டா தான் அரசாங்கத்தை கவுப்போம் நாங்க. அந்த நாடு வேற... ஜெயிலுக்கு போயிட்டோம்ன்னு சொல்ல கூடாது. ஜெயிலுக்கு, இயேசுபிரானை ஜெயில்ல போடலையா...??? அவர் என்ன தொழுநோய் குற்றவாளியா... அப்ப யாரு ஜட்ஜ்மெண்ட்....??? பிலாத்... பிலாத்து தான் ஜட்ஜ்மெண்ட் குடுக்கறாரு ஏசுபிரானுக்கு... சிலுவையில தூக்கு போடு....!!! ஜட்ஜ்மெண்ட் என்ன பெரிய  நீதியா? கவர்மெண்ட் சொன்னா தூக்குல ஏத்தறான். சட்டப்படியா தூக்குல ஏத்திருவாங்க?   சட்டப்படி நாங்க ரெண்டு பெரும் அடிச்சிகிட்டதுக்கு சாவவே இல்ல ரெண்டு பெரும். உயிரோட இருக்கறோம்... எங்களுக்கு சட்டப்படி தண்டனை குடுக்கறதா இருந்தா எனக்கு ஒரு வாரம் குடுக்கலாம். நியூசன்ஸ் கேஸ்...!!!  அடிச்சிகிட்டது நியூசன்ஸ் கேஸ். ஆனா, எனக்கு ஏழு வருஷம் ஏன் குடுக்கணும்? அது பாலிடிக்ஸ். ஆகையினால ஜெயிலுக்கு போனோம்ன்னு எல்லாம் பெட்டிசன்ல சொல்லி மலேயா நாட்ல குடுத்தா மலேயா பிரதமர்கள் என்ன செய்வார்கள்...???? மலேயா போலிஸ் என்ன செய்யும்?  யார் சொன்னாலும் கேக்கறவங்க இல்ல அரசியல்..!!! அதுதான் அருமையான அரசியல். ஏன்னா, அவனும் ஓட்டு போடறான். என்னை கூப்பிட்டவனும் ஓட்டு போடறான். அவன் சொன்னதும் கேக்கறாங்க இல்ல.... அதுதான் அரசாங்கம். கூப்பிட்டு எங்களை விசாரிச்சாங்க. திராவிடர் கழகம் ராமசாமிய  கேட்டாங்க. செக்கியூரிட்டின்னாங்க...''

 ''....சில பெரிய மனுசர்கள் கேட்டாங்க. எவ்வளவு லட்சம் வேணும்ன்னாலும் கட்றோம்ன்னாங்க.... அப்புறம் விட்டுட்டாங்க. இப்போ பெட்டிசன் போட்டவனெல்லாம் எங்க இருக்கானோ.... என்ன செய்யிறானோ. ஆகையினால இந்த வியாதி மக்களுக்கு இருக்கும். என்ன செய்யிறோம்ன்னு தெரிஞ்சி பேசணும்.... தெரிஞ்சி செய்யணும். ரோட்ல ஒரு கார் போச்சின்னா நாய் குலைக்கும். அந்த நாய்க்கு காரை பார்த்து தான் குலைச்சது அதுக்கு தெரியும். அது கரெக்ட். அதுவே அடுத்த தெருவுல இன்னொரு நாய் குலைக்கும். அதை கூப்பிட்டு கேட்டு பாருங்க...!!! அது சொல்லும், அதுவெல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது... அந்த தெருவுல ஒரு நாய் கொலைச்சது அதை பார்த்திட்டு நானும் கொலைச்சேன். அந்த மாதிரி நிலையிலே நாம் வரக்கூடாது. தமிழர்கள் உயர்ந்தவர்கள் என்ற பெயரினை இந்த நாட்டிலே எடுக்க வேண்டும் என்பது  எனது அவா. நீங்கள் எடுப்பீர்கள் என்பது எங்களுக்கு தெரியும்...'''

'''.....நாங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டவர்கள்.. கஷ்டப்பட்டு மேலே வந்தோம். சும்மா வரல. நான்லாம் மேடையில டிராமாவில் வந்து பேசுவேன். வேற, நான் கடவுள் இல்லைன்னு சொல்லல. ''......கடவுள் என்று ஒருவன் இருப்பானேயானால், அவன்  என்னை மன்னிப்பானாக...!!! '' அந்த  வசனம் பேச கடவுள்ன்னுவேன். ''...டாய்...!!! கடவுளு பத்தி பேசாதடா...''''  ஜனங்க.  என்னமோ இவனுங்க கடவுள் செக்ரட்ரி மாதிரியும் நான்  என்னவோ கடவுள் விரோதி மாதிரியும் மக்கள் அப்படி இருந்தாங்க... நான் கேப்பேன்... ஏய்யா... நான் கேப்பேன்...  நான் கடவுள் இல்லைன்னு சொல்லிட்டா கடவுள் இல்லாம போயிடுவாரா...???? அப்போ எனக்கு அவ்வளவு பவர் இருக்குன்னு நெனக்கிறியா.... இதையெல்லாம் நான் கேப்பேன். லேசா....!!! கடவுள் என்பது பெரிய உயர்ந்த....எப்போ .... கும்பிடனும்...!!!! சதா கடவுளை கும்பிட கூடாது   ஒரு நேரம்...!!!! முகம்மதியர்கள் எப்படி கும்பிடுகிறார்கள் ? ஒரு நேரம் வந்ததும் தொழுதிடறாங்க. என் பாயிண்ட்.... ஏத்துகிட்டா ஏத்துக்கோங்க... விட்டா  விட்ருங்க. நான் அங்க சொல்றதை சொல்றேன். இங்க நான் சொல்லல... இங்க நீங்க எவ்வளவு தடவை வேணும்னாலும் கும்பிட்டுக்கோங்க.... கிருஸ்துவர்கள் எப்படி கும்பிடுகிறார்கள்... அதே போல் கும்பிடு. சும்மா கடவுளை கூப்பிட கூடாது. அது எனக்கு பிடிக்காது...'''''

''.....இவன் ஏழு அடி உயரம் இருப்பான்.... ஆறடி வாசக்கால் வெச்சி வீடு கட்டுவான்.... உள்ள போகும்போதே இடிச்சிக்குவான்.... ஆஆஆஆஆஆ.....!!!!! கடவுளே.....!!!!!!  என்னடா கடவுள் ?   ஏண்டா முட்டாளே.....!!! கூட ஒரு அடி தூக்கி வெச்சி கட்டினா???? சரியா போச்சி.....!!!! சும்மா போய் கடவுளே கடவுளேன்னு நோன்றியே... ஏன்னா,  கடவுளை டிஸ்டர்ப் பண்ணகூடாது.  நான் ரொம்ப கோவம் வரும். ஒரு நேரம் தான்  கடவுளை மனிதன்  நினைக்கலாம். ஏன்னா, அந்த அறிவோடு எடுத்துக்கொண்டால் நாம் உயர்ந்த அறிவாளிகள்  ஆகிவிடுவோம்... என்பதை எடுத்து காட்டுவேன். அவ்வளவுதான் . கடவுளை பத்தி எங்க எத்தனை தடவை சொல்றது பாருங்க ... காலம்பர பாத்ரூமுக்கு போவான்..... உக்காரும்போதே கடவுளே....!!!! ஐயோ ஆண்டவனே...!!!! கடவுளை போய் அங்க உடறான் பாருங்க... இந்த மாதிரி எல்லாம் கடவுளை பத்தி பேசக்கூடாது என்று அங்கே சொல்லுவேன். கடவுள் உண்டு.... கடவுளை தொழு..... கண்ட இடத்திலே கடவுளை பத்தி பேசாதே...''''

''....... ஒன்னும் இல்ல, வெள்ளைக்காரன்...!!!! அது பேப்பர்ன்னுதான் போட்டிருப்பான். அந்த பேப்பர் கால்ல பட்டா போதும்... ஒரு சாதாரண பேப்பர் அதை   எடுத்து சரஸ்வதி.... சரஸ்வதி...... கண்ல ஒத்திக்குவான். இவன் கண்ல ஒத்திக்குவான், அவன் பாத்ரூம்ல சுருட்டி வெச்சிருவான்....  எடுத்து கிழிச்சி கிழிச்சி  அவன் பாட்டுக்கு எதோ செய்யிறான் ....!!!!!!

''.....இந்த மாதிரி வழியிலே கடவுளை நாம் காப்பற்றி கொள்வதற்கும், நாமும் மற்றவரைப்போல்  அறிவுள்ள கடவுளை வணங்குகிறோம் என்பது உலகத்திற்கு காட்ட வேண்டும் என்பது எனது அவா. நான் மற்றவர்களுக்கு சொல்லவில்லை..... மற்றவர்கள் எப்படி வேணும்ன்னாலும்  வணங்கி கொள்ளுங்கள்..... என் தமிழகத்திலே நான் சொல்லக்கூடிய வார்த்தைகள் நான் லேசாக சொல்லி பார்தேன்... அவ்வளவு தான். எனக்கு கடவுள் மனிதனுக்கு எட்டாதது... கடவுள் பரிசத்திற்குட்படாதது கடவுள்.. எங்கும் இல்லாது.... கரன்ட்  மாதிரி கடவுள் ... அதெல்லாம் கெடுத்திட்டோம் தமிழகத்திலே... அன்பே சிவம்ன்றான் கடவுளை... பெரியவர்கள் நீங்கள் நினைக்க வேண்டும் அன்பெ சிவம்ன்னு வெச்சிருக்கிறோம்... அவர் கையில் ஆயுதம்... சூலம்... அன்புக்கு ஆயுதம் எதற்கு ? கொலைகாரன் பயலுக்கு இல்ல கையில் இருக்கணும்... சூலத்தை உருவிட்டா போதும்.. வேற ஒன்னும் இல்ல ... இதைதான் நான் சொல்வேன் அங்க... கடவுள் இல்லைன்னு அல்ல.... எல்லா உயிரிலும் கடவுள் வீற்றிருக்கறான் கடவுள் .... எல்லா உயிரிலும் வீற்றிருக்க கூடிய  கடவுள் என்று சொல்கிறார்கள்... அப்போ என் உயிரிலும் தான் கடவுள் இருக்க வேண்டும்....'''

''.... இங்க கூட என்னை கேட்டார்கள். பெரிய ஆபிசர்கள். அங்க என்ன தமிழர்களுக்கும் மலையாளத்தார்களுக்கும் சண்டையா... என்று கேட்டார்கள். அப்படியே வெந்து போச்சி என் மனசு..... யாரோ திரிச்சி விட்டுட்டான் இங்க....  என்னய்யா.... உலகம் தோன்றியதிலே இருந்து நாமும் மலையாளத்தார்களும் அண்ணன் தம்பி மாதிரி வாழறோம்.... நாம் சண்டை போட்டுகிட்டோம்ன்னு எவனோ சொல்லிட்டான்... அந்த நெனப்பு  யாருக்கும் இருக்க கூடாது.... எதோ ராமசந்தருக்கும் அரசியல் இருப்பவர்களுக்கு எதோ தகராறு.... அதை வைத்து கொண்டு இந்த விவாதத்தை இங்கே  கிளப்ப கூடாது. நம் தமிழகத்தை கேட்டு கொள்வது  போல் இங்கேயும்  கேட்டு கொள்கிறேன்....''''

'''.....ஆகையினால் என் அருமை மலேசியா தமிழர்களே...!!!! இங்கே வந்து மிக பொறுமையாக இந்த  கூட்டத்தை நடாத்தி கொடுத்ததற்கு உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கத்தை தெரிவித்து கொண்டு இத்துடன் என் வார்த்தையை முடித்துகொள்கிறேன்....  வணக்கம்....!!!!! '''

Wednesday, March 13, 2013

பாடம் படிக்க வேண்டும்

சமயத்துல இப்படி கூட நடக்குமா அப்படின்னு சில விஷயங்கள் ஆச்சர்யமோ அதிர்ச்சியோ படவைக்கும். இந்த விஷயம் ரெண்டாவது ரகம். நானும் எவ்வளவோ தடவை பத்திரிக்கைகள்ல செய்திகள் அப்படின்னு இதுமாதிரி விசயங்களை கேட்டிருக்கேன், படிச்சிருக்கேன். ஆனா அப்போவெல்லாம் அது ஒரு செய்தி அப்படிங்கற அளவுக்கு தான் நான் யோசிச்சிருக்கேன். டெல்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம் பத்தி எழுத நெனச்சிருந்தேன். முடியல. அப்புறம் வினோதினி மரணம். அப்பவும் முடியல. ஆனா, நான் சமீபத்தில் படிச்ச இந்த பதிவு இதுக்கு மேல தாங்க முடியாது. ஒரு பெரியவர், பேராசிரியராக இருந்தவர் எழுதின பதிவு. எவ்வளவு அபத்தமான கருத்துக்களை சொல்லியிருக்கார்னு நீங்களே பாருங்க.



ஒரு கொடூரமான கற்பழிப்பும் அதை ஒட்டி மரணமும் இனிமேல் அதை கொலை என்று தான் சொல்ல வேண்டும்) நடந்திருக்கிறது. தவறு செய்தவனை ஏன் தவறு செய்தான் என கேட்க திராணியில்லை. ஏன் அந்த பொண்ணு வெளிய போனா ? கூட போனவன் யாரு, அவன் பேரென்ன ? ஜாதகம் என்ன ? இதுவெல்லாம் என்ன மாதிரியான கருத்துக்கள் என்றே புரியவில்லை. அது என்னன்னே புரியல, ஒரு ஆணுக்கு ஏதேனும் தப்பு நடந்துட்டா அது தப்பு செய்தவன் மேல் விடியும், அதுவே பெண்ணுக்கு ஏதேனும் தீங்குன்னா மட்டும் அந்த பெண் மீதே விடிகிறது. அந்த பெண் பெயரில் இருந்து, ஜாதகம், தொழில், நடத்தை எல்லாம் அலசப்படுகிறது.

அய்யா கனவான்களே, பெண்களும் மனிதர்களே...!!! அவர்களுக்கும் ஆசாபாசங்கள் இருக்கிறது, அவர்களுக்கும் எல்லா உரிமையும் இருக்கிறது. பெண்ணை பெண்ணாக, உயிருள்ள, மனசுள்ள, ஒரு சக மனுஷியாக பார்க்க ஆண்கள் நாம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

Monday, March 11, 2013

குழந்தை எனும் தேவதை

மக்களே...!!!

இன்னைக்கு நாம பேசப்போற விஷயம் நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச, அனுபவிச்ச விஷயம் தான். நம்ம வாழ்க்கையை, நம்ம நேரத்தை, நாம பொறந்த காரணத்தை அது பணம், பேர், புகழ், காதல், கல்யாணம் இப்படி எவ்வளவோ இருந்தாலும் அதுக்கும் மேல அழகா ஆக்கற விஷயம் குழந்தை. நமக்கு எவ்வளவு பணம் வசதி இருந்தாலும், ஒரு குழந்தை வீட்ல இருக்குற சந்தோசம் கெடைக்காது. அதுவே எந்த வசதியும் இல்லன்னாலும், ஒரே ஒரு குழந்தை அந்த வீட்டையே நந்தவனமா ஆக்கறதை நாம கண்கூடா பார்த்திருப்போம். நானும் பார்த்திருக்கறேன்.

நான் வழக்கமா யார்கிட்டயும் அவ்வளவா ஒட்டாத ஆள். எங்க வீட்லயும் சரி, வெளியிலயும் சரி, யார்கிட்டயும் அவ்வளவா சேர மாட்டேன். ஸ்கூல்ல படிக்கும் போதும், காலேஜ்ல படிக்கும் போதும், ரொம்ப செலக்டிவா நண்பர்கள், அவ்வளவா வெளிய போற வழக்கம் இல்லை. என்னோட உலகம் அப்படின்னு சொன்னா அது புத்தகங்கள் தான். ஆனா, எங்க வீட்டுக்கும் ஒரு குட்டி வந்தா. அது என்னோட அக்கா குழந்தை. அதுவும், பெண் குழந்தை. நல்ல ரோஜாப்பூ நிறத்துல, குட்டி குட்டியா கை, கால், புஷ்டியா கன்னம்,  நல்லா பெரிய சைஸ் ரோஜாப்பூ மாதிரி. அவ்ளோதான் வீடே மாறிடுச்சி. நானும் தான். இதுக்கும் எங்க வீடு அவ்வளவா வசதி இல்லாத வீடு தான். அது தான் நான் முதன் முதல்ல ஒரு குழந்தை வீட்ல எவ்வளவு மாற்றங்களை கொண்டு வர முடியும் அப்படின்னு அனுபவப்பூர்வமா உணர்ந்தது.



அதுக்கு அப்புறம் குடும்பம், குழந்தை அப்படின்னா என்னன்னு நானும் கொஞ்சம் கொஞ்சமா உணர ஆரம்பிச்சேன். அதுவரைக்கும் பெருசா செண்டிமெண்ட்ஸ் எல்லாம் எதுவும் எனக்கு இருந்ததில்லை. அந்த வகையில என்னோட அக்கா பொண்ணு எனக்கு வாத்தியார் அப்படின்னு சொல்லலாம். அதுக்கு அப்புறம் நானும் என்னோட பக்கத்து வீடு, நண்பர்கள் இப்படி எங்க போனாலும் குழந்தைங்க இருக்கிற வீடுன்னா கவனமா பார்க்க ஆரம்பிச்சேன். நான் பார்த்த வரைக்கும் ஒரு வீட்டை, வாழ்க்கையை அதனோட அழகு மாறாம அனுபவிக்கனும் அப்படின்னா அந்த வீட்ல ஒரு குழந்தை இருந்தா கண்டிப்பா முடியும்.



ஒரே ஒரு உதாரணம் - என்னோட அக்காவுக்கு மேல சொன்ன பெண் குழந்தைக்கு அப்புறம் ஒரு பையன். நல்லா துரு துருன்னு அறுந்த வாலுன்னு சொல்வாங்களே அதுக்கு உருவம் குடுத்தா அவனை அப்படியே உரிச்சி வெக்கும். அப்படி ஒரு அடக்கமான பையன். அய்யாவுக்கு ரெண்டரை வயசு ஆனதும் பிரீ-கே.ஜில சேர்த்தாங்க. ஒரு நாள் அங்க ஓவியப்போட்டி. எதோ ஒரு தனியார் அமைப்பு இப்போ ஞாபகம் இல்லை, சென்னையில இருக்கிற எல்லா பள்ளிகூடங்களுக்கும் சேர்த்து ஒரு பொதுவான போட்டி அறிவிச்சிருந்தாங்க. அதுல அய்யாவும் படம் வரைய செலக்ட் ஆகியிருந்தார். நான் தான் அவனுக்கு வரைய பயிற்சி குடுத்தேன். அய்யாவும் நல்லாத்தான் ஆர்வமா கத்துக்கிட்டார். படமும் வரைஞ்சார். என்ன படம் வரையனும் அப்படின்னு போட்டி நேரத்துல தான் சொல்வாங்கன்னு சொல்லியிருந்தாங்க. அதனால நான் என்ன குடுப்பாங்கன்னு யூகிச்சி பூ, பழம், மரம் அப்படின்னு சில படங்கள் வரை சொல்லிக்குடுத்திருந்தேன்.

போட்டி நாள் வந்தது. அவனோட அப்பா அம்மா அவனை காலையில கூட்டிட்டு போனாங்க. எனக்கும் கொஞ்சம் டென்சன் தான். மதியம் 2 மணிக்கு திரும்பி வந்தாங்க. அக்காவும் மாமாவும் பயங்கர கோவத்துல இருந்தாங்க. சரி புள்ள நல்லா படம் போடலப்போலன்னு நெனச்சி, அக்காவை என்ன ஆச்சின்னு கேட்டா, என்னை எதுவும் கேக்காத, அவனையே கேளுங்கறாங்க. மாமாவை கேட்டாலும் அதே சொல்றார். ஆனா, இவன் ஒரே ஜாலி மூட்ல இருந்தான். ''...என்னடா வரைய சொன்னாங்க? நல்லா வரைஞ்சியா...? '' ன்னு கேட்டா ''...அதெல்லாம் நல்லா வரைஞ்சேன் மாமா...'' அப்படின்னான். ஆனா, அவனோட அப்பா அம்மா ஏன் கோவமா இருக்காங்கன்னு தெரியல. அப்புறம் விளக்கமா கேட்டா இவரோட லீலைகளை அவுத்து விட்டாங்க.

போட்டி நடந்தது ஒரு பள்ளிக்கூடத்துல. சென்னையில இருக்கிற எல்லா பள்ளிகள்ல இருந்தும் வந்து கலந்துக்கிட்டாங்க  போல. சரியா டைமுக்கு எல்லாரையும் ஒழுங்குப்படுத்தி, உக்கார வெச்சி வரைய சார்ட், பேனா பென்சில் எல்லாம் குடுத்திட்டு எதோ ஒரு படம் வரைய சொல்லியிருக்காங்க. இவன் பக்கத்துல இவன் சைஸ்க்கு ஒரு பாப்பா. பொண்ணு. ரெண்டும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்ததும், சீரியஸா உக்காந்து பேச ஆரம்பிச்சிடுச்சிங்க. என்ன, எதை பத்தி பேசிக்கிட்டதுங்களோ தெரியாது, ஆனா, போட்டி நடந்த ரெண்டு மணி நேரமும் ரொம்ப சீரியசா டிஸ்கஸ் பண்ணிட்டு ரெண்டுமே வெறும் வெள்ளை பேப்பரை குடுத்திட்டு வந்திட்டாங்க, அந்த பாப்பாவோட அப்பா அம்மாவும், இவனோட அப்பா அம்மாவும் வெளிய இருந்து வரைய சொல்லி எவ்வளவோ சிக்னல் குடுத்தும், ரெண்டும் கண்டுக்கவே இல்லை.

அதுதான் அவங்க கோவத்துக்கு காரணம். இதைக்கேட்டதுக்கு அப்புறம் எனக்கா சிரிப்பு தாங்க முடியல. நான் மச்சான்னு தான் அவனை கூப்பிடுவேன். ''..டேய் அப்படி என்னடா பேசின...?'' ன்னு கேட்டேன். பெரிய மனுஷன் தோரனையில, ''...... ஹ்ம்ம்மம்ம்ம்.... நாங்க பேசினோம்....!!!! '' அப்படிங்கறான்.

இந்த மாதிரியெல்லாம் குழந்தைகளால தான் பண்ண முடியும். அவங்களுக்கு எப்பவும் அவங்க பிரச்சனை தான் பெருசு. அவங்க பேசினாலும், சிரிச்சாலும், அழுதாலும் அவங்க என்ன பண்ணினாலும் கண்டிப்பா அழகாதான் இருக்கும். ஒரு குழந்தை மட்டும் தான் தானும் அழகா இருந்து நம்மளையும் நம்ம வீட்டையும் அழகா ஆக்க முடியும். வேணும்ன்னா எனக்கு FACE BOOK-ல வந்த ரெண்டு வீடியோக்களை பாருங்க. ஒரு குட்டி பையன் அடிக்கிற லூட்டியும், ஒரு குட்டி பொண்ணுக்கு அவங்க அப்பா அம்மா பொறந்தநாள் பரிசு குடுக்கறாங்க. அதுக்கு அந்த பாப்பா படற சந்தோசமும் எத்தனை பணம் கொட்டி குடுத்தாலும் நமக்கு கெடைக்காது. பாருங்க, நீங்களே  இதை நீங்களும் ஒத்துக்குவிங்க...!!!!!!!

Sunday, March 3, 2013

தமிழ்நாடு - 1940

மக்களே...!!!

இந்த பதிவு 1940 சமயத்துல இருந்த தமிழ்நாடு பத்தினது. யாரோ ஒரு ஆங்கிலேயர் 1940ல இருந்த தமிழ்நாட்டு கிராமம் ஒன்னை அழகா படம் பிடிச்சி INSIDE INDIA (இந்தியாவிற்குள்) அப்படிங்கற பேர்ல ஆவணப்படுத்தியிருக்கார். 




அதிகாலையில் எழுந்து ரெடி ஆகி வேலைக்கு போற விவசாயிகள், நெசவாளர்கள், மண்பாண்டம் செய்பவர்கள், சிலை வடிக்கும் சிற்பி, கோவில், குளம், பிராமண அக்ரஹாரம், கோலம் போடறது, அங்க வர குடுகுடுப்பைக்காரர் இப்படி ஒன்னு ஒன்னும் பார்க்க கண்கோடி வேணும். உரல்ல நெல் குத்தறதையும், கோழிக்கு கூட தானியம் போட்டு வளர்க்கறதையும் அழகா சொல்லியிருக்கார். 

ஏர் ஓட்டறவங்க, வேர்க்கடலை செடி அறுவடை, நெற்கதிர் அடிக்கறவங்க, அதுலயும் மதுரை வீரன் நாடகம் ஒன்னும், எதோ ஒரு திருவிழா ஒன்னும் கூட பதிவாகி இருக்கு. திருவிழாவையும், ஜல்லிக்கட்டையும் பார்த்தா, அனேகமா மதுரைப்பக்கம் ஒரு கிராமமா இருக்கவும் வாய்ப்பு இருக்கு. சான்சே இல்லை. பார்த்து என்ஜாய் பண்ணுங்க.  
 

-- 
-- 
------ கோவம் நல்லது...! 
                 ******

உருவைக்கண்டு எள்ளாதே...!!!

மக்களே...!!!

நான் சமீபத்தில் படிச்ச ஒரு விஷயம். படிக்கறவங்களுக்கு கொஞ்சம் நெகிழ்ச்சியாவும், ஒரு படிப்பினையும் குடுக்கிற நிகழ்ச்சியாவும் இருக்கும் அப்படிங்கறதால இங்க பகிரலாம்ன்னு ஒரு யோசனை. படிச்சிட்டு உங்க கருத்துகளை கமெண்ட்ல போடுங்க. 

நம்ம எல்லாருக்கும் ஒரு பழக்கம் இருக்கு. என்னையும் சேர்த்து தான் சொல்றேன். ஒருத்தங்களை பார்த்தே எடை போடுறது. அவங்க யாரு என்ன அப்படின்னு தெரிஞ்சிக்காம அவங்க உருவத்தை பார்த்து, இவங்க இப்படிதான்னு முடிவு கட்டிடறது. அதுலயும் நம்ம ஊருல ஒரு பழக்கம், பார்க்க கொஞ்சம் கருப்பா வித்தியாசமா இருந்திட்டா, நம்ம மக்களோட பார்வையில்அந்த பையன் கண்டிப்பா ரவுடிதான். இது ரொம்ப தப்பு இல்லையா?


ஓகே... விசயத்துக்கு வரேன். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் - STANFORD UNIVERSITY நாம எல்லாரும் கேள்வி பட்டிருப்போம். அமெரிக்காவில் இருக்கிற உலகப்புகழ் பெற்ற பல்கலை கழகங்கள்ள மிக மிக முக்கியமானது. உலக அளவில் இரண்டாம் இடத்தை பெற்றது. அமெரிக்காவின் மேற்கு எல்லையில், கலிபோர்னியா மாகாணத்தில் ஸ்டான்போர்ட் அப்படிங்கற இடத்தில் 8,180 ஏக்கர் பரப்பளவுல அமைஞ்சிருக்கு. 1891 ஆம் வருஷம், அப்போதைய கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னரும், அப்போதைய கலிபோர்னியா மாகனத்தின் சார்பா அமெரிக்க செனட்டராவும் இருந்த லீலேண்டு ஸ்டான்போர்ட்  - LELAND STANFORD அவர்களும் அவருடைய மனைவி ஜேன் லத்ராப் ஸ்டான்போர்ட் - JANE LATHROP STANFORD அவர்களும் 16 வயதிலேயே டைப்பாய்டு காய்ச்சலில் இறந்துபோன தன்னுடைய மகனின் நினைவாக ஆரம்பிச்சது தான் இந்த பல்கலைக்கழகம்.

 
    லீலேண்டு ஸ்டான்போர்ட் 

 இதை ஆரம்பிச்சதுக்கு பின்னாடி இருக்கிற காரணமும், கதையும் தான் நான் சொன்ன மனதை நெகிழ வைக்கும் ஒன்னு. அப்போ இந்த பல்கலைக்கழகம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழகம் தான் இருந்ததுலயே சிறந்த, பெரிய பல்கலைக்கழகம். இந்த பல்கலைகழகத்துலதான் கவர்னரோட பையன் படிச்சிட்டு இருந்தார். இங்க படிச்சிட்டு இருந்தப்போதான் உடல்நிலை சரியில்லாம 16 வயசுலேயே இறந்துட்டார். ஒருமுறை இந்த பல்கலைக்கழக துணைவேந்தரை ஒரு வயதான தம்பதி பார்க்க வந்திருந்தாங்க. அவங்க ரொம்ப வயசாகி, போட்டிருந்த உடை அவ்வளவா நல்லா இல்லாததால துணை வேந்தரோட உதவியாளர் அவர்களை துணை வேந்தர் அறைக்குள்ள போக அனுமதிக்கல. ஆனா அவங்க அடம்பிடிச்சி, பிடிவாதமா அவரை பார்க்க அனுமதி வாங்கி சந்திச்சாங்க. ஆனா, துணை வேந்தரும், அவரோட உதவியாளர் போலவே அலட்சியம் செய்தார். வேண்டா வெறுப்பா என்ன விசயத்துக்காக தன்னை பார்க்க வந்திங்கன்னு கேட்டார்.

அந்த வயதான தம்பதிகள் அதை பொருட்படுத்தாம, அந்த பல்கலைக்கழகத்தில் படிச்சிட்டு இருந்த தங்களோட மகன் இறந்து போயிட்டதை சொல்லி, அந்த பையன் நினைவா இந்த பல்கலைக்கழகத்துக்கு ஒரு கட்டிடம் கட்டித்தர விருப்பம் தெரிவிச்சாங்க. இதைக்கேட்டதும் துணைவேந்தர் கோவப்பட்டு, ஒரு கட்டிடம் கட்டறதுன்னா என்ன செலவாகும் தெரியுமா, கண்டவங்களுக்கெல்லாம் நினைவு மண்டபம் கட்ட இந்த பல்கலைக்கழகம் என்ன கல்லறை தோட்டமான்னு கேட்டு அவங்களை நோகடிச்சதோட மட்டுமில்லாம, இங்க இருக்கிற மொத்த கட்டிடங்களோட மதிப்பு 7.5 மில்லியன் டாலர்கள், நீங்க குடுக்க போற சில ஆயிரம் டாலர்கள் வெச்சி ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொல்லி அவமானப்படுத்திட்டார்.

                                 வணிக மேலாண்மை துறை கட்டிடங்கள் - ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்

ஆனா, அதைக்கேட்ட அந்த தம்பதிகளுக்கு ரொம்ப ஆச்சர்யம். ஒரு பல்கலைக்கழகம் கட்ட இவ்வளவுதான் செலவாகுமா, நாங்க என்னவோ நெனச்சிட்டோம், நாங்க தனியா ஒரு பல்கலைக்கழகமே ஆரம்பிச்சிக்கறோம்ன்னு சொல்லிட்டு வந்து, மேற்கு கடற்கரை ஓரமா தங்களுக்கு இருந்த இடத்துல ஆரம்பிச்சதுதான் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம். அன்னைக்கு அந்த அப்பா அம்மா நன்கொடையா கொடுக்க நெனச்சதே ஒரு பெரிய பல்கலைக்கழகம் ஆரம்பிக்கிற அளவுக்கான பணம். ஆனா அவங்க சந்திச்ச அவமானம் இந்த உலகத்துக்கு ஒரு பெரிய பல்கலைக்கழகத்தை கொடுத்தது.

அன்னைக்கு மட்டும் அந்த துணைவேந்தர் மதிச்சி பேசி இருந்தா அவருக்கு ஏகப்பட்ட பணம் கெடைச்சிருக்கும். அதோட போட்டிக்கு ஒரு பல்கலைக்கழகம் வந்திருக்காது. ஏன்னா, அப்போது பெரிய பல்கலைக்கழகம் அப்படின்னு இருந்த ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழகம் வெறும் 380 ஏக்கர்தான். ஆனா, ஏகப்பட்ட பணத்தைக்கொட்டி, ஏழு வருஷம் கஷ்டப்பட்டு 8,180 ஏக்கர்ல உருவாக்கினது இந்த ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம். இதைதான் பெரியவங்களும் எதையும் உருவத்தை பார்த்து எடைப்போடக்கூடது அப்படின்னு சொல்லியிருக்காங்க.

இந்த பல்கலைக்கழகமும் பல சிக்கல்களை சந்திச்சிருக்கு. இதை உருவாக்கின கலிபோர்னியா மாகாண கவர்னர் இறந்து போனப்போ மிகப்பெரிய பணச்சிக்கலையும், 1906 ஆம் வருஷம் பூகம்பத்தையும் சந்திச்சிருக்கு. இருந்தாலும் எல்லாத்தையும் வெற்றிகரமா கடந்து இன்னைக்கு உலகம் முழுக்க இருந்து பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு படிக்க ஒரு கனவு பல்கலைக்கழகமா இருக்கு.

                                                                                                            - - இணையத்துல படிச்சது

Friday, March 1, 2013

குழந்தைக்கு ஐந்து வயசு

மக்களே...!!!
 
நான் சமீபத்தில் பார்த்த விளம்பரம். மொதல்ல இது கொஞ்சம் வேடிக்கையா இருந்தாலும் இதுக்கு பின்னாடி இருக்கும் உண்மை நெஞ்சில் அறையக்கூடியது.


சமீபத்திய ஆய்வுப்படி இந்தியாவில் ஒவ்வொரு வருசமும் தோராயமாக 20 லட்சம் குழந்தைகள் 5 வயசு ஆகறதுக்கு முன்னாடியே இறந்துபோறாங்க. காரணம் நுண்ணுயிர் தொற்று, அதன்மூலம் வயிற்றுப்போக்கு, காமாலை, மூளைக்காய்ச்சல் இதெல்லாம் தான். கொடுமை என்ன தெரியுமா? இதை தடுக்க அவங்க செய்யவேண்டியது எல்லாம் நல்ல முறையில் கை கால்களை கழுவி சுத்தப்படுத்தினாலே போதுமானது. ஆனா, சுத்தமா இருத்தல் பற்றிய போதிய அறிவும், விழிப்புணர்வும் இல்லாததாலே வருசத்துக்கு இத்தனை குழந்தைகள் செத்துபோறாங்க. 

                                                              (கை கழுவும் முறை பத்தின விளக்கப்படம்)

லைப்பாய் சோப்பு கம்பெனி இதை மக்களுக்கு உணர்த்தற மாதிரி சமீபத்தில் ஒரு விளம்பரப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தாங்க. அவங்க இதை செய்ததுக்கு அவங்க வியாபாரம் ஒரு காரணமா இருந்தாலும், அதுல சொல்லியிருக்கிற செய்தி மிக முக்கியமானது. இப்போ நாம செய்ய வேண்டியது நமக்கு தெரிஞ்ச பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இதை பத்தின விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். எல்லா குழந்தைகளும் 5 வயசை கடக்க உதவி செய்வோம். அவ்வளவே...!!!!!