Zool Ad Network

Monday, March 11, 2013

குழந்தை எனும் தேவதை

மக்களே...!!!

இன்னைக்கு நாம பேசப்போற விஷயம் நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச, அனுபவிச்ச விஷயம் தான். நம்ம வாழ்க்கையை, நம்ம நேரத்தை, நாம பொறந்த காரணத்தை அது பணம், பேர், புகழ், காதல், கல்யாணம் இப்படி எவ்வளவோ இருந்தாலும் அதுக்கும் மேல அழகா ஆக்கற விஷயம் குழந்தை. நமக்கு எவ்வளவு பணம் வசதி இருந்தாலும், ஒரு குழந்தை வீட்ல இருக்குற சந்தோசம் கெடைக்காது. அதுவே எந்த வசதியும் இல்லன்னாலும், ஒரே ஒரு குழந்தை அந்த வீட்டையே நந்தவனமா ஆக்கறதை நாம கண்கூடா பார்த்திருப்போம். நானும் பார்த்திருக்கறேன்.

நான் வழக்கமா யார்கிட்டயும் அவ்வளவா ஒட்டாத ஆள். எங்க வீட்லயும் சரி, வெளியிலயும் சரி, யார்கிட்டயும் அவ்வளவா சேர மாட்டேன். ஸ்கூல்ல படிக்கும் போதும், காலேஜ்ல படிக்கும் போதும், ரொம்ப செலக்டிவா நண்பர்கள், அவ்வளவா வெளிய போற வழக்கம் இல்லை. என்னோட உலகம் அப்படின்னு சொன்னா அது புத்தகங்கள் தான். ஆனா, எங்க வீட்டுக்கும் ஒரு குட்டி வந்தா. அது என்னோட அக்கா குழந்தை. அதுவும், பெண் குழந்தை. நல்ல ரோஜாப்பூ நிறத்துல, குட்டி குட்டியா கை, கால், புஷ்டியா கன்னம்,  நல்லா பெரிய சைஸ் ரோஜாப்பூ மாதிரி. அவ்ளோதான் வீடே மாறிடுச்சி. நானும் தான். இதுக்கும் எங்க வீடு அவ்வளவா வசதி இல்லாத வீடு தான். அது தான் நான் முதன் முதல்ல ஒரு குழந்தை வீட்ல எவ்வளவு மாற்றங்களை கொண்டு வர முடியும் அப்படின்னு அனுபவப்பூர்வமா உணர்ந்தது.



அதுக்கு அப்புறம் குடும்பம், குழந்தை அப்படின்னா என்னன்னு நானும் கொஞ்சம் கொஞ்சமா உணர ஆரம்பிச்சேன். அதுவரைக்கும் பெருசா செண்டிமெண்ட்ஸ் எல்லாம் எதுவும் எனக்கு இருந்ததில்லை. அந்த வகையில என்னோட அக்கா பொண்ணு எனக்கு வாத்தியார் அப்படின்னு சொல்லலாம். அதுக்கு அப்புறம் நானும் என்னோட பக்கத்து வீடு, நண்பர்கள் இப்படி எங்க போனாலும் குழந்தைங்க இருக்கிற வீடுன்னா கவனமா பார்க்க ஆரம்பிச்சேன். நான் பார்த்த வரைக்கும் ஒரு வீட்டை, வாழ்க்கையை அதனோட அழகு மாறாம அனுபவிக்கனும் அப்படின்னா அந்த வீட்ல ஒரு குழந்தை இருந்தா கண்டிப்பா முடியும்.



ஒரே ஒரு உதாரணம் - என்னோட அக்காவுக்கு மேல சொன்ன பெண் குழந்தைக்கு அப்புறம் ஒரு பையன். நல்லா துரு துருன்னு அறுந்த வாலுன்னு சொல்வாங்களே அதுக்கு உருவம் குடுத்தா அவனை அப்படியே உரிச்சி வெக்கும். அப்படி ஒரு அடக்கமான பையன். அய்யாவுக்கு ரெண்டரை வயசு ஆனதும் பிரீ-கே.ஜில சேர்த்தாங்க. ஒரு நாள் அங்க ஓவியப்போட்டி. எதோ ஒரு தனியார் அமைப்பு இப்போ ஞாபகம் இல்லை, சென்னையில இருக்கிற எல்லா பள்ளிகூடங்களுக்கும் சேர்த்து ஒரு பொதுவான போட்டி அறிவிச்சிருந்தாங்க. அதுல அய்யாவும் படம் வரைய செலக்ட் ஆகியிருந்தார். நான் தான் அவனுக்கு வரைய பயிற்சி குடுத்தேன். அய்யாவும் நல்லாத்தான் ஆர்வமா கத்துக்கிட்டார். படமும் வரைஞ்சார். என்ன படம் வரையனும் அப்படின்னு போட்டி நேரத்துல தான் சொல்வாங்கன்னு சொல்லியிருந்தாங்க. அதனால நான் என்ன குடுப்பாங்கன்னு யூகிச்சி பூ, பழம், மரம் அப்படின்னு சில படங்கள் வரை சொல்லிக்குடுத்திருந்தேன்.

போட்டி நாள் வந்தது. அவனோட அப்பா அம்மா அவனை காலையில கூட்டிட்டு போனாங்க. எனக்கும் கொஞ்சம் டென்சன் தான். மதியம் 2 மணிக்கு திரும்பி வந்தாங்க. அக்காவும் மாமாவும் பயங்கர கோவத்துல இருந்தாங்க. சரி புள்ள நல்லா படம் போடலப்போலன்னு நெனச்சி, அக்காவை என்ன ஆச்சின்னு கேட்டா, என்னை எதுவும் கேக்காத, அவனையே கேளுங்கறாங்க. மாமாவை கேட்டாலும் அதே சொல்றார். ஆனா, இவன் ஒரே ஜாலி மூட்ல இருந்தான். ''...என்னடா வரைய சொன்னாங்க? நல்லா வரைஞ்சியா...? '' ன்னு கேட்டா ''...அதெல்லாம் நல்லா வரைஞ்சேன் மாமா...'' அப்படின்னான். ஆனா, அவனோட அப்பா அம்மா ஏன் கோவமா இருக்காங்கன்னு தெரியல. அப்புறம் விளக்கமா கேட்டா இவரோட லீலைகளை அவுத்து விட்டாங்க.

போட்டி நடந்தது ஒரு பள்ளிக்கூடத்துல. சென்னையில இருக்கிற எல்லா பள்ளிகள்ல இருந்தும் வந்து கலந்துக்கிட்டாங்க  போல. சரியா டைமுக்கு எல்லாரையும் ஒழுங்குப்படுத்தி, உக்கார வெச்சி வரைய சார்ட், பேனா பென்சில் எல்லாம் குடுத்திட்டு எதோ ஒரு படம் வரைய சொல்லியிருக்காங்க. இவன் பக்கத்துல இவன் சைஸ்க்கு ஒரு பாப்பா. பொண்ணு. ரெண்டும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்ததும், சீரியஸா உக்காந்து பேச ஆரம்பிச்சிடுச்சிங்க. என்ன, எதை பத்தி பேசிக்கிட்டதுங்களோ தெரியாது, ஆனா, போட்டி நடந்த ரெண்டு மணி நேரமும் ரொம்ப சீரியசா டிஸ்கஸ் பண்ணிட்டு ரெண்டுமே வெறும் வெள்ளை பேப்பரை குடுத்திட்டு வந்திட்டாங்க, அந்த பாப்பாவோட அப்பா அம்மாவும், இவனோட அப்பா அம்மாவும் வெளிய இருந்து வரைய சொல்லி எவ்வளவோ சிக்னல் குடுத்தும், ரெண்டும் கண்டுக்கவே இல்லை.

அதுதான் அவங்க கோவத்துக்கு காரணம். இதைக்கேட்டதுக்கு அப்புறம் எனக்கா சிரிப்பு தாங்க முடியல. நான் மச்சான்னு தான் அவனை கூப்பிடுவேன். ''..டேய் அப்படி என்னடா பேசின...?'' ன்னு கேட்டேன். பெரிய மனுஷன் தோரனையில, ''...... ஹ்ம்ம்மம்ம்ம்.... நாங்க பேசினோம்....!!!! '' அப்படிங்கறான்.

இந்த மாதிரியெல்லாம் குழந்தைகளால தான் பண்ண முடியும். அவங்களுக்கு எப்பவும் அவங்க பிரச்சனை தான் பெருசு. அவங்க பேசினாலும், சிரிச்சாலும், அழுதாலும் அவங்க என்ன பண்ணினாலும் கண்டிப்பா அழகாதான் இருக்கும். ஒரு குழந்தை மட்டும் தான் தானும் அழகா இருந்து நம்மளையும் நம்ம வீட்டையும் அழகா ஆக்க முடியும். வேணும்ன்னா எனக்கு FACE BOOK-ல வந்த ரெண்டு வீடியோக்களை பாருங்க. ஒரு குட்டி பையன் அடிக்கிற லூட்டியும், ஒரு குட்டி பொண்ணுக்கு அவங்க அப்பா அம்மா பொறந்தநாள் பரிசு குடுக்கறாங்க. அதுக்கு அந்த பாப்பா படற சந்தோசமும் எத்தனை பணம் கொட்டி குடுத்தாலும் நமக்கு கெடைக்காது. பாருங்க, நீங்களே  இதை நீங்களும் ஒத்துக்குவிங்க...!!!!!!!

2 comments:

  1. நல்லதொரு சந்தோஷ பகிர்வு...

    நாமும் குழந்தைகளோடு குழந்தைகளாக மாறி விட்டால், அந்த சந்தோசமே தனி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்...!!!!!!!!!!!

      Delete