Zool Ad Network

Wednesday, January 23, 2013

MARIAH'S CHALLENGE - மரியாவின் சவால்...!!!

 நண்பர்களே...!!!
பிரபல பதிவர் லக்கிலூக் - யுவகிருஷ்ணா அவர்களுடைய வலைப்பூவில் படித்தது. தமிழகத்தின் இப்போதைய தேவை இதுமாதிரியான ஒரு முயற்சி என்பதால் இங்கே மறு பிரசுரம் செய்துள்ளேன். யுவகிருஷ்ணா அவர்களுக்கு நன்றிகள் பல...!!!
அக்டோபர் 28, 2007. பதினான்கு வயது மரியா செத்துப்போனாள்.
நண்பர்களோடு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தவள் மீது கார் மோதியது. காரை ஓட்டிவந்தவன் இருபது வயது இளைஞன். கண்மண் தெரியாத அளவுக்கு குடித்திருந்தான். மரியாவோடு நடந்து வந்த நண்பர்களுக்கும் படுகாயம். மருத்துவமனையில் பல மணி நேரம் வலியோடு துடிதுடிக்க உயிருக்குப் போராடி பரிதாபமாக மரணித்தாள் மரியா.
அமெரிக்காவில் இருக்கும் மாண்டனா ஒரு குடிகார மாகாணம். அந்நாட்டிலேயே அதிக குடிகாரர்கள் வசிக்கும் மாகாணங்கள் முதல் ஐந்தில் மாண்டனாவும் இடம்பெறுகிறது. இங்கிருக்கும் பட்டே நகரில்தான் மரியா வசித்தாள். அவளுடைய அகால மரணத்தையடுத்து, குடிப்பழக்கத்துக்கு எதிராக இங்கே கிளம்பிய குரல், இன்று அமெரிக்கா முழுக்க எதிரொலிக்கிறது.
மரியாவின் மரணத்தையடுத்து அவரது தோழர்கள் இறுதி அஞ்சலி செலுத்தவும், அவரது தந்தை மெக்கார்த்தியிடம் துக்கம் விசாரிக்கவும் அவளது வீட்டில் கூடினார்கள். நியாயமாகப் பார்க்கப்போனால் மகள் இறந்த துக்கத்திலிருந்த மெக்கார்த்தி, அவளது அநியாய மரணத்துக்கு காரணமானவனை சட்டத்தின் முன் நிறுத்தி தூக்கில் போடவேண்டும் என்றுதான் கோபப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிதானமாக யோசித்தார். குடிபோதையில் கார் ஓட்டிவந்தவனை குடிநோயாளியாகதான் பார்த்தார். நோய்க்கு சிகிச்சைதான் அவசியம். தண்டனையல்ல என்று நினைத்தார்.

மரியா சவப்பெட்டியில் கிடக்க, சக மாணவியின் திடீர் மரணம் தந்த அதிர்ச்சியில் பயந்துப்போயிருந்த குழந்தைகளிடம் ஓர் உரை நிகழ்த்தினார் மெக்கார்த்தி.
“குழந்தைகளே! மரியாவின் மரணத்தோடு நம்முடைய நம்பிக்கைகள் முற்றுப்பெற்றுவிடப் போவதில்லை. இந்த அகால மரணத்தின் பின்னணியில் இருக்கும் பிரச்னைகளை நாம் பேசியாகவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். செயல்பட்டாக வேண்டிய நேரம் இது.
நான்கே நான்கு ஆண்டுகள் மட்டும் நான் சொல்வதை கேளுங்கள். உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். இந்த சவாலை வெல்பவர்களுக்கு இறுதியில் நான் பணம் தருவேன்”
மரியாவின் குரலாகவே அவரது தந்தையின் குரலை மாணவர்கள் கேட்டார்கள். அவரது சவாலில் இடம்பெற்றிருந்த விஷயங்கள் இவைதான்.

* உங்களது வயது இருபத்தி ஒன்றுக்கு கீழே இருந்தால் நீங்கள் மதுபானத்தை தொடவே கூடாது. யாரேனும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்களது வாகனத்தில் ஏறக்கூடாது.

* இருபத்தி ஒன்று வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் குடிப்பதை நான் ஆட்சேபிக்கப் போவதில்லை. அது உங்கள் தேர்வு. ஆனால் குடித்துவிட்டு கட்டாயம் வாகனம் ஓட்டக்கூடாது. நம் குழந்தைகளுக்கு ரோல் மாடலாக நீங்கள் திகழ வேண்டும்.

* நீங்கள் மதுபானம் விற்கும் பணியில் இருப்பவரேயானால் குழந்தைகளின் கைக்கு அது கிடைக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

* நீங்கள் சட்டத்தை அமல்படுத்தும் பணியில் இருப்பவரேயானால் நமது சட்டத்தை முழுமையாக பின்பற்றி குழந்தைகளை பாதுகாக்கும் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மெக்கார்த்தியால் வெளியிடப்பட்ட ‘மரியாவின் சவால்’, அவள் வயது குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்கும் பொருந்தியது. இந்த சவால் விவரம் ஊடகங்களில் வெளியாக, அடுத்த சில நாட்களிலேயே சுற்றுவட்டார மாகாணங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இச்சவாலை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்தனர். மேலும் தன்னார்வலர்கள் பலரும் இணைந்து மரியாவின் சவால் குறித்த விழிப்புணர்வை நாடெங்கும் இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு கொண்டுச்செல்லும் பணியில் ஈடுபட்டனர்.
மெக்கார்த்தி சொல்பேச்சு தவறாதவர். முதல் கட்டமாக சவாலை ஏற்றுக்கொண்டு வெற்றி கண்ட 140 பேருக்கு தலா ஆயிரம் டாலர் (நம்மூர் பணத்தில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய்) வழங்கினார். மரியா இறந்த விபத்தில் அவளோடு படுகாயம் அடைந்த குழந்தைகளின் பெற்றோரும் மெக்கார்த்தியோடு இப்பணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த உதவித்தொகை விவரத்தை கேள்விப்பட்ட பல நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து மரியாவின் சவாலை ஏற்றுக்கொண்டு வெல்பவர்களுக்கு பணம் தர ஒப்புக் கொண்டது. அமெரிக்காவெங்கும் இப்போது பலரும் இந்தப் பணிக்கு பொருள்ரீதியான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்.
பீப்பிள் பத்திரிகை மெக்கார்த்தியை நாட்டின் முக்கியமான முப்பது நம்பிக்கை நட்சத்திரங்களுள் ஒருவராய் புகழாரம் சூட்டியது. ஐம்பத்தி இரண்டு வயதாகும் மெக்கார்த்தி இப்போது அமெரிக்காவின் ஹீரோ.  2012ன் சிறந்த மனிதர்கள் என்று சி.என்.என். தொலைக்காட்சி பட்டியலிட்டிருக்கும் முதல் பத்து பேரில் மெக்கார்த்தியும் இடம்பெற்றிருக்கிறார்.
மரியாவின் சவாலை நாமும் எடுத்துக் கொள்ளலாம். www.mariahschallenge.com/ என்கிற இணையத்தள முகவரிக்கு சென்று, இச்சவாலை ஒப்புக்கொள்வதாக ஒப்பந்தம் இடவேண்டும். சவால் காலத்தில் குடி தொடர்பான எந்த குற்றச்சாட்டும் பெறாதவர்கள், சவால் காலம் முடிந்தவுடன் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். மரியாவின் சவால் தங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்று 300 வரிகளில் விளக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பவர்களை மெக்கார்த்தியும், அவரோடு இணைந்திருப்பவர்களும் நேர்முகம் காண்பார்கள். இப்போதைக்கு அமெரிக்காவில் இருக்கும் மாணவர்களுக்குதான் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்டு குழந்தைகளும் சவாலை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தெரிந்தால் மெக்கார்த்தி அதற்காக மகிழ்ச்சியடைவாரே தவிர, கூடுதல் பரிசு தரவேண்டியிருக்கிறதே என்று சோர்ந்துவிட மாட்டார்.
கடந்த சில ஆண்டுகளில் மரியாவின் சவால் நிறைய பேரின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. சவாலை வென்று உதவித்தொகை பெற்ற ஜோஷ் என்கிற மாணவர் சொல்கிறார். “பார்ட்டிகளில் குடிப்பதை தவிர உருப்படியான நிறைய வேலைகள் எனக்கு இருக்கின்றன என்பதை மரியாவின் சவால் உணர்த்தியது. இப்போது இரண்டு பகுதிநேர வேலைகளை செய்து, நிறைய பணம் சம்பாதிக்கிறேன். விளையாட்டுகளிலும் ஆர்வமாக பங்கேற்கிறேன். இந்தப் பாதையில் பயணம் செய்ததால் நிறைய பேருக்கு என் மீது மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நிறைய நண்பர்களை பெற்றுத் தந்திருக்கிறது”
மாணவப் பருவத்தில் குடியைத் தொடாதவர்கள் பெரும்பாலும் பிற்பாடு அப்பழக்கத்துக்கு அடிமையாவதில்லை. மரியாவின் சவால் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை உருவாக்கித் தருவதால், அவர்களது எதிர்காலம் குடிநோயில் வீழாமல் பாதுகாப்பானதாக மாறுகிறது.
மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர் பலரும் கூட இச்சவாலை ஏற்றிருக்கிறார்கள். உதவித்தொகைக்காக அல்ல. குடிப்பது தவறு என்று குழந்தைகளுக்கு போதிக்கும் முன்பாக, தாங்கள் குடிப்பதை நிறுத்தவேண்டும் என்கிற தார்மீக உணர்வுக்காக.
“மரியாவை நான் திரும்பப் பெற முடியாது. ஆனால் எனக்கு ஏற்பட்ட இழப்பு வேறு ஒரு தந்தைக்கு ஏற்படாமல் தடுக்க முடியும்” என்கிறார் மெக்கார்த்தி.
தமிழ்நாட்டில் இப்படி ஒரு சவால் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டியது இன்றைய அவசரத்தேவை.
 - நன்றி யுவகிருஷ்ணா 

No comments:

Post a Comment