மக்களே...!!!
இது கதம்பமாலை வலைப்பக்கத்தில் வந்த ஒரு பதிவு. எல்லாருக்கும் உபயோகமா இருக்குமேன்னு இங்க பகிர்ந்துக்கறேன்.
போனவாரம் எனது உறவினர் ஒருவரின் பத்துமாத குழந்தைக்கு கடுமையான
வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி பிரச்சினை. எங்கெங்கோ குப்பன், சுப்பன் டாக்டரிடமெல்லாம்
காட்டி மருந்து வாங்கிக்கொடுத்தும் நோய் கொஞ்சம்கூட தீர்ந்தபாடில்லை. அவர் கொஞ்சம்
வசதி குறைவானர்தான். மூன்று நாட்கள் ஆகியும் குழந்தைக்கு உடல்நிலை தேறாததால் எனது ஏரியாவுக்கு அருகிலிருக்கும் ஒரு பிரபல தனியார்
கிறித்துவ மருத்துவமனையில் குழந்தையை சேர்க்கலாம் என்று நான் கூறினேன். மருத்துவச்செலவுகளை
நான் கவனித்துக்கொள்வதாய் சொல்லியும்கூட அவர் அதை மறுத்து தன்னையும் குழந்தையையும்
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் டிராப் செய்தால் மட்டும் போதும் என்றார். பேருந்தில்
அவர் குழந்தையை தூக்கிக்கொண்டு கோயம்பேடு சென்று அங்கிருந்து போரூர் செல்வதற்குப்பதில்
மாதவரம்-மதுரவாயல் நெடுஞ்சாலை வழியாகச்சென்றால் வெறும் இருபது நிமிட பயணமென்பதால் நானும்
அவர்களை எனது காரில் ஏற்றிக்கொண்டு போரூரைச்சென்றடைந்தேன்.
மதுரவாயல் நெடுஞ்சாலையில் போரூர் டோல் கேட்டுக்கு வெகு அருகிலேயே
பூந்தமல்லி செல்லும் சாலையின் மீதே அமைந்திருந்தது SRMC என்று அழைக்கப்படும் ஶ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல்
சென்ட்டர். எனக்கு இதுதான் முதல் முறை என்பதால் ஹாஸ்பிட்டலை பார்த்ததும் கொஞ்சம் மிரண்டுதான்
போனேன். என்னோடு வந்த உறவினரிடம் இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரியாய் இருக்கிறது. தனியார்
ஆஸ்பத்திரி வேறு. பணம் நிறைய வாங்கப்போகிறார்கள் என்றேன். அதற்கு அவர் இந்த ஆஸ்பத்திரியில் வசதியானவர்களுக்கு பணம்
வாங்கிக்கொண்டு வைத்தியம் பார்ப்பதாகவும், ஏழைகளுக்கு இலவசப்பிரிவும் இயங்குவதாகவும்
கூறியதைக்கேட்டதும் வியப்பாய் இருந்தது. (அப்போதுதான் அவர் வீட்டிலிருந்து கிளம்பும்போது
அணிந்திருந்த கொஞ்ச நஞ்ச தங்கநகைகளையும் கழற்றி வைத்துவிட்டு கழுத்தில் வெறும் மஞ்சள்
கயிறு அணிந்து வந்ததன் மர்மம் எனக்கு விளங்கியது(!)...)
ஏற்கனவே தனக்கு இரண்டு பிரசவமும் இங்குதான் நடந்தது என்றும்,
தனது மூத்த மகளின் தொண்டை அறுவை சிகிச்சையும் இங்குதான் நடந்தது என்றும் கூறினார்.
இலவசப்பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு ஏதாவது முக்கியமான மருந்துகள் என்றால் அதற்கு
மட்டும் காசு வாங்குவார்கள் என்றும், மற்றபடி ஆபரேஷன் சார்ஜ், பெட் சார்ஜ், உணவு போன்ற
அனைத்துமே ஃப்ரீதான் என்றார்.
அவரை வெறுமனே டிராப் செய்துவிட்டு வர மனது ஒப்பாததால் டாக்டரைப்பார்க்கும்
வரை கூடவே இருந்து, டாக்டர் இலவச வார்டுக்கு அட்மிஷன் எழுதிக்கொடுத்ததும், லக்கேஜ்களை
எடுத்துக்கொண்டு அவரை இலவச வார்டில் விட்டுவிட்டுக்கிளம்பலாம் என்று அவருடன் ‘’ G “
Block நோக்கி நடந்தேன். அந்த பிளாக்கில் நுழைந்ததும்
என்னே ஆச்சர்யம். அங்கு நிலவிய சுத்தமும், கட்டிட அமைப்புகளும் அது இலவசப்பிரிவு என்று
எவருமே நம்ப மாட்டாத அளவுக்கு இருந்தது. குழந்தைகள் பிரிவு நாலாவது மாடியில் என்பதால்
லிஃப்டில் ஏறி சென்றடைந்தோம். குழந்தைகள் வார்டுக்குள் நுழைந்ததும் எனக்கு எப்பவோ ஒரு
முறை எனது இரண்டு வயது மகனுக்கு அப்போல்லோவில் அட்மிட் பண்ணியிருந்த அட்மாஸ்ஃபியருக்கும்,
ராமச்சந்திராவின் இலவச வார்டு அட்மாஸ்ஃபியருக்கும் பெரிதாய் வித்தியாசங்கள் எதுவும்
தெரியவில்லை. எனது உறவினரை அவரது குழந்தைக்காக ஒதுக்கப்பட்ட கட்டிலில்
அமரவைத்துவிட்டு அவரது உடமைகளையெல்லாம் அவரிடம் ஒப்படைத்துவிட்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.
முழுவதும் வெவ்வேறு பிரச்சினைகளால் அவதிப்பட்ட குழந்தைகளாலும் அவர்களுடைய பெற்றோர்களாலும்
நிரம்பியிருந்தது அந்த வார்டு.
பார்வையாளர்கள் நேரம் தவிர மற்ற நேரங்களில் நோயாளியுடன் ஒருவர்
மட்டுமே தங்க அனுமதியாம். நோயாளிக்கும், அவருடன் தங்குபவருக்கும் மூன்று வேளையும் தரமான
இலவச உணவு சரியான நேரம் தவறாமல் அவர்கள் இருக்கும் இடத்திற்கே வந்துவிடுகிறது. ஏதாவது
உயிர் காக்கும் முக்கிய மருந்துகளுக்கு மட்டும் நோயாளியின் பொருளாதார நிலைக்கேற்ப பணம்
வாங்கப்படுகிறது.
மற்றபடி சிகிச்சை தரம், ஊழியர்களின் சேவை, ஹாஸ்பிட்டலின்
சுத்தம், சுகாதாரம், கட்டுமானம் மற்றும் கட்டுப்பாட்டு விதிகள் என அனைத்தும் பெரிய
பெரிய தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு நிகரானதாகவே இருக்கிறது இங்கு.
எனது உறவினரின் குழந்தை கிட்டத்தட்ட மூன்றுநாட்கள் அந்த ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெற்று உடல் நிலை சரியாகி வீடு திரும்பியது. இந்த மூன்று நாட்கள் சிகிச்சைக்கு செலவான தொகை வெறும் நானூற்று சொச்சம் மட்டுமே. அதுகூட சில முக்கிய மருந்துகளுக்கும், சில பரிசோதனைகளுக்கும் மட்டுமே. மற்றபடி பெட்சார்ஜ், உணவு, டாக்டர் ஃபீஸ், etc., etc., அனைத்தும் இலவசம்தான். ராமசாமி உடையாரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனை, யுனிவர்சிட்டியையும் கொண்டிருக்கிறது. மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலான இந்த ராமச்சந்திரா மெடிக்கல் சென்ட்டர் தனியாருக்குச்சொந்தமானது என்றாலும் இதில் இயங்கும் இலவசப்பிரிவு நிச்சயமாய் மனதாரப்பாரட்டத்தக்கதே என்பதில் மாற்றுக்கருத்துக்கள் எனக்கில்லை.
இண்டெர்நெட்டில் இதைப்பற்றிய தகவல்களைத்தேடியபோது பலர் இந்த
மருத்துவமனையை சரியில்லை என்று விமர்சித்திருந்ததை பார்த்தேன். அவர்கள் பார்வையில்
எப்படி வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் எனது பார்வையில் இதன் இலவசப்பிரிவு நிச்சயம்
நமது ஏழை மக்களுக்கும், வசதியற்றவர்களுக்கும் மிகப்பெரிய வரம்தான். இதன் இலவசப்பிரிவைப்பற்றி
பதிவாக எழுதுவதால் அதைப்படிப்பவர்கள் தங்களுக்கு தெரிந்த ஏழை மக்களுக்கு அதைப்பற்றி
கூறுவதன் மூலம் வசதியற்ற மக்களும் தரமான சிகிச்சையை இங்கு பெறும் வாய்ப்பு வாய்க்கும்
என்பதால் மட்டுமே இதையும் ஒரு பதிவாய் எழுதினேன்...
வாழ்க ஶ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் சென்ட்டரின் இலவச சேவை... வளர்க தொடர்ந்து தொய்வின்றி இந்த சேவை... GOOD LUCK.