கேரளாவில், பழங்குடியின இளைஞர், பிரசவ வலியால் துடித்த, தன்
மனைவியை காப்பாற்றுவதற்காக, பலத்த மழையில், 40 கி.மீ., தூரம், மனைவியை
தோளில் சுமந்து வந்த சம்பவம், பரிதாபத்தையும், ஆச்சர்யத்தையும்
ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், அந்த இளைஞரால், மனைவியை மட்டுமே காப்பற்ற
முடிந்தது. வயிற்றிலிருந்த, குழந்தையை காப்பற்ற முடியவில்லை.
கேரள மாநிலம், பத்தனம் திட்டா மாவட்டத்தில், கொன்னி என்ற அடர்ந்த வனப்
பகுதி உள்ளது. இங்கு, பழங்குடியின மக்கள், கணிசமாக வசிக்கின்றனர். வனப்
பகுதியில் உள்ள தேனை எடுத்து, அதை, நகர்ப்பகுதிகளில் விற்பது தான்,
இவர்களது பிரதான தொழில். இதில், மிக குறைந்த வருவாயே கிடைக்கிறது. இதனால்,
வறுமையின் பிடியில், இவர்கள் சிக்கியுள்ளனர். இந்த பகுதியைச் சேர்ந்த,
அய்யப்பன் என்ற இளைஞருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த, சுதா என்ற பெண்ணுடன்,
கடந்தாண்டு திருமணம் நடந்தது. சுதா, ஏழு மாத கர்ப்பமாக இருந்தார்.
இந்நிலையில், கடந்த வாரம், சுதாவுக்கு, திடீரென பிரசவ வலி
ஏற்பட்டது.அப்போது, அங்கு, மிக பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அந்த
பகுதிக்கு, கேரள மாநிலத்தின் மற்ற பகுதிகளிலிருந்து, எந்த வாகன
போக்குவரத்தும் இல்லை. கால்நடையாகவே, நகரங்களுக்கு செல்ல வேண்டும். வேறு
வழியில்லாததால், மனைவியையும், அவரது வயிற்றில் உள்ள சிசுவையும்
காப்பாற்றுவதற்காக, அய்யப்பன், தைரியமாக ஒரு முடிவை எடுத்தார். மனைவியை
தோளில் சுமந்தபடியே, பலத்த மழையையும் பொருட்படுத்தாது, அடர்ந்த வனப்
பகுதியில், வேகமாக நடந்தார்.அதிகாலை, 6:00 மணிக்கு, அவரது, நடை பயணம்
துவங்கியது. நேரம் செல்லச் செல்ல, மழை அதிகரித்தது. நீண்ட நேரம்
சுமந்ததால், தோளில், கடுமையான வலியும் ஏற்பட்டது. ஆனால், மனைவியின் அபய
குரலும், சிசுவை காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பும், அவருக்கு உத்வேகத்தை
ஏற்படுத்தின.
இதனால், சிரமத்தை பொருட்படுத்தாமல், தொடர்ந்து நடந்தார். இறுதியாக, 40
கி.மீ., தூரத்தை கடந்த அவர், மாலை, 6:00 மணிக்கு, மலை அடிவாரத்துக்கு
வந்தார். அங்கிருந்த ஜீப்பை, வாடகைக்கு அமர்த்தி, தன் மனைவியை,
பத்தனம்திட்டா மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். சுதாவை பரிசோதித்த
மருத்துவர்கள், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறினர். இதையடுத்து,
உடனடியாக, கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, தன் மனைவியை அழைத்து
வந்தார். அங்கு, சுதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ரத்த அழுத்தம்
அதிகமாக உள்ளதாகவும், வலிப்பு நோய் ஏற்பட்டிருப்பதாகவும்
கூறினர். சுதாவுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடும் போராட்டத்துக்கு
பின், சுதாவை காப்பாற்றினர். ஆனாலும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையை
காப்பாற்ற முடியவில்லை. அந்த குழந்தை, இறந்தே பிறந்தது. இதனால், அய்யப்பன்,
சோகத்தில் ஆழ்ந்தார். இந்த தகவல் வெளியானதும், கோட்டயம், பத்தனம்திட்டா
பகுதியைச் சேர்ந்தவர்கள், மனைவியை தோளில் சுமந்தபடி, கடும் மழையில், 40
கி.மீ. நடந்த, அய்யப்பனின் மன உறுதியை பாராட்டினார். அவரது
குடும்பத்துக்கு, நிதி உதவியும், குவியத் துவங்கியுள்ளது.
நடந்த சோகமும் இழப்பும் அவருக்கு ஈடு செய்ய முடியாதது அப்படின்னாலும், அவர் அவரது மனைவி மேலும், அவர் குழந்தை மேலும் வெச்சிருந்த காதல்...!!! எனக்கு விவரிக்க வார்த்தைகள் இல்லை.
- நன்றி தினமலர்.
நடந்த சோகமும் இழப்பும் அவருக்கு ஈடு செய்ய முடியாதது அப்படின்னாலும், அவர் அவரது மனைவி மேலும், அவர் குழந்தை மேலும் வெச்சிருந்த காதல்...!!! எனக்கு விவரிக்க வார்த்தைகள் இல்லை.
- நன்றி தினமலர்.
No comments:
Post a Comment