Zool Ad Network

Saturday, February 23, 2013

எம்.ஜி.ஆர் எழுதுகிறார்

MGR - இந்த மூன்று எழுத்துக்கு தமிழ்நாட்டு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு அளவிட முடியாதது. இந்த மூன்று எழுத்து நம் மக்களை மந்திரம் போல ஆட்டுவித்த காலம் ஒன்று இருந்தது. ஏன், இப்போதும் உள்ளது. இந்த அளவு மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட அவர் எழுதியதை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. நீங்களும் படிச்சி பாருங்க...!!!!!!!

என் வாழ்க்கையில், நான் அடைந்த அனுபவம் ஒன்றை எனக்காகவும், என்னைச் சார்ந்த நண்பர்களுக்காகவும் எடுத்துக்கூற விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன், சென்னை நியூ எல்பின்ஸ்டன் தியேட்டர், அண்ணா சாலையில் இருந்தது. அத்தியேட்டரில், "இரு சகோதரர்கள்' என்ற படம் திரையிடப்பட்டது. அதில் கதாநாயகனாக, "இந்திய மேடைப் புலி' என்ற பட்டம் பெற்றிருந்த கே.பி.கேசவன் நடித்திருந்தார். நாடக மேடையிலும், சினிமாவிலும் நடித்து, மிகப் பெரும் புகழ்பெற்றவர் அவர். அவரும், நானும், வேறு சிலரும், அந்த படத்தை காண அன்று சென்றிருந்தோம். இடைவேளையின் போது, அவர் வந்திருப்பதை அறிந்த மக்கள், அவரை பார்ப்பதற்காக எழுந்து, அவர் பெயரைக் கூவி, கூச்சலிடத் தொடங்கினர். அந்த படத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்த நான், இதைக் கண்டு திகைத்து, கே.பி.கே., அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

                                    "டைகர் ஆப் இண்டியன் ஸ்டேஜ்' திரு K. P. கேசவன் அவர்கள்


"இத்தனை ஆதரவு பெற்றவருக்கு அருகில் நாம் உட்கார்ந்திருக்கிறோமே...' என்ற பெருமை கூட எனக்கு உண்டாயிற்று. படம் முடிவதற்குள், வெளியே வந்து விட வேண்டும் என்று, நாங்கள் புறப்பட்டோம். அதற்குள் மக்கள் வெளியே வந்து விட்டனர். நாங்கள் மேலேயிருந்து படியிறங்கி வருவது கூட கஷ்டமாகி விட்டது. நான் மற்றவர்களை பிடித்து தள்ளி, மக்களிடமிருந்து கே.பி.கே.,வை விலக்கிச் சென்று, காரில் ஏற்றி அனுப்பினேன். அன்று மக்களுக்கு என்னை யார் என்றே தெரியாது.

இந்த சம்பவம் நடந்து, பல ஆண்டுகளுக்கு பின், சென்னை நியூ குளோப், (முன்பிருந்த அலங்கார்) தியேட்டருக்கு கே.பி.கேசவனும், நானும் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்க போனோம். அப்போது, நான் நடித்த, "மர்மயோகி' படம் வெளிவந்து சில மாதங்களே ஆகியிருந்தன. இடைவேளையின் போது, நான் வந்திருப்பதை அறிந்த மக்கள், எழுந்து கூச்சல் போட்டனர். எனக்கு அருகில், அதே கே.பி.கேசவன் அமர்ந்திருந்தார். அவரை யார் என்றே படம் பார்க்க வந்தவர்கள் கவனிக்கவில்லை. படம் முடிந்து வெளியே வந்தோம். மக்கள் கூட்டம் என்னைச் சூழ்ந்தது. என் பெயரையும், "மர்மயோகி' படத்தில் எனக்காக சூட்டப்பட்ட, "கரிகாலன்' என்ற பெயரையும் சொல்லி வாழ்த்தினர். மக்கள் கூட்டத்தின் நெரிசல் அதிகமாகவே, கே.பி.கேசவன், அந்த ரசிகர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றி, டாக்சியில், (அப்போது எனக்கென்று சொந்தக்கார் எதுவும் கிடையாது) ஏற்றி அனுப்பி விட்டார்.

நான் புறப்படும் போது, அந்த மக்கள் கூட்டத்தில் அவரும் ஒருவராக நின்று கொண்டிருந்தார். அவரது நடிப்பு திறமை, எந்த வகையிலும் குறைந்து விடவில்லை என்பதோடு, நன்கு நடிக்கும் ஆற்றலை அப்போது, அவர் அதிகமாகவே பெற்றிருந்தார் என்பதுதான் உண்மை. மக்களால் புகழப் பெற்ற, "டைகர் ஆப் இண்டியன் ஸ்டேஜ்' என கவர்னரால் புகழப்பெற்ற, "இரு சகோதரர்கள்' வெளியிடப்பட்ட ஆண்டில், "சிறந்த நடிகர்' என்று தேர்ந்தெடுக்கப்பட்ட, இதே கே.பி.கேசவன் அவர்கள், தங்களோடு இருக்கிறார் என்பதை, பாவம், அந்த மக்களால் அப்போது புரிந்து கொள்ள இயலவில்லை. என்னால் உச்சநிலையில் இருப்பதாக நம்பப்பட்ட அதே கே.பி.கேசவன், நான் உச்சநிலையில் இருப்பதாக கருதும் வாய்ப்பை, அதே மக்கள் அவருக்கு அனுபவ முத்திரை ஆக்கினர். இதை நேரடியாக நானே அனுபவித்த பின், இந்த போலியான உச்சநிலை என்பதை எப்படி பெற்றுக் கொள்வது... நம்புவது?

கலைஞனுக்கு உச்சநிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம், மக்களால் தரப்படும் மயக்க நிலை; அவ்வளவுதான். இதை நம்பி ஏமாந்து விடுவோமானால், நாம் மற்றவருக்கு பண்பு, பாசம், பகுத்தறிவு முதலியவற்றை தரும் கடமைமிக்க கலைஞனாக இயங்க முடியாது. கலைஞனைப் பொறுத்தவரையில், அவனுக்கு வீழ்ச்சியே கிடையாது. சூழ்நிலை உயர்த்தும், தாழ்த்தும். அது பிற மக்களின் மனதில் தோன்றும் முடிவு! ஆனால், கலைஞன் தன் உள்ளத்தை, எந்த நேரத்திலும் பொறாமையின் தாக்குதலுக்கு இரையாக்காமல், மனிதாபிமானத்தோடு கலைத் தொழிலில் செயல்படுவதாக ஏற்றுக் கொள்ளச் செய்தால், அந்த உணர்வுக்கு தோல்வியே கிடையாது. மற்றவர்கள் முன், அவன் தோல்வியடைந்தவனாகத் காட்சியளித்தாலும், கலைஞனுடைய நல் உணர்வுள்ள மனதின் முன், அவன் வெற்றி பெற்றவனாவான்.

கடந்த 1966ல் எம்.ஜி.ஆர்., "சமநீதி' இதழில் எழுதியது.

எவ்வளவு நிதர்சனமான உண்மை...!!!!!!!!! வாழ்வில் உயர்வு, தாழ்வு, பணம், புகழ் எல்லாம் மற்றவர்களால் நம் மீது ஏற்படுத்தப்படும் ஒரு போலியான மயக்கம் அவ்வளவே. இந்த உலகில் தங்க தட்டில் சாப்பிட்டு, வானளாவ புகழ் பெற்று, பின் இருந்த சுவடு இல்லாமல் காணாமல் போன எவ்வளவோ பேரை நாம் கண்முன்னால் கண்டிருந்தும் மக்கள் அதன் பின்னால் ஓடுவதை கண்டு சிரிப்பே வருகிறது. சிந்திப்போம்...!!!!!!!

நன்றி - தினமலர் வார மலர்.

No comments:

Post a Comment